வேலைவாய்ப்புக்காக ஜே.இ.இ., தரவரிசையை வெளியிட வேண்டாம்: ஐ.ஐ.டி., அறிவுறுத்தல்

புதுடில்லி: 'வளாக வேலைவாய்ப்புக்காக சமர்ப்பிக்கப்படும் சுய விபரக் குறிப்பில் இருந்து, 'ஜே-.இ.இ., - கேட்' உள்ளிட்ட நுழைவுத் தேர்வுகளின் தரவரிசை விபரங்களை மாணவர்கள் நீக்க வேண்டும்' என, ஏ.ஐ.பி.சி., எனப்படும் அனைத்து ஐ.ஐ.டி.,க்களின் வேலைவாய்ப்புக் குழு கேட்டுக் கொண்டுள்ளது.

நாட்டில் உள்ள புகழ்பெற்ற தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களான ஐ.ஐ.டி., மற்றும் என்.ஐ.டி., எனப்படும் தேசிய தொழில்நுட்ப கழகங்களில் சேர ஐ.ஐ.டி., - ஜே.இ.இ., நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது.

இதேபோல், பொறியியல், தொழில்நுட்பம், அறிவியல் மற்றும் கட்டடக்கலை போன்ற துறைகளில் முதுநிலை பட்டப்படிப்பில் சேரவும், பொதுத் துறை நிறுவனங்களில் வேலைவாய்ப்பை பெறவும், 'கேட்' எனப்படும் பொறியியல் பட்டதாரி தகுதி தேர்வு நடத்தப்படுகிறது.

படிப்பு முடிந்து, வளாகங்களில் நடத்தப்படும் வேலைவாய்ப்பு முகாம்களில் பங்கேற்கும் மாணவர்கள், தங்கள் சுய விபரக் குறிப்பில் இந்த தேர்வுகளில் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் தரவரிசை பட்டியலை குறிப்பிட்டு வருகின்றனர்.

அவ்வாறு குறிப்பிடுவதால், நலிவடைந்த சமூகங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்கள் வாயிலாக ஐ.ஐ.டி.,யில் இடம்பெற்ற மாணவர்கள் மத்தியில் வேலை வழங்கும் நிறுவனங்கள் பாகுபாடு காட்டுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இந்நிலையில், ஐ.ஐ.டி., மாணவர்கள், வளாக வேலைவாய்ப்புக்கான தங்கள் சுய விபரக் குறிப்பில், ஜே.இ.இ., கேட் உள்ளிட்ட பொது நுழைவுத் தேர்வு தரவரிசையை வெளியிட வேண்டாம் என, அனைத்து ஐ.ஐ.டி.,க்களின் வேலைவாய்ப்புக் குழு கேட்டுக்கொண்டுள்ளது.

நாட்டில் உள்ள பொறியியல் நிறுவனங்களுக்கு வேலைவாய்ப்பு தொடர்பான வழிகாட்டுதல்களை வெளியிடும் 23 ஐ.ஐ.டி.,க்களின் ஒட்டுமொத்த அமைப்பான ஏ.ஐ.பி.சி., கூட்டத்தில் இதற்கான முடிவு எட்டப்பட்டது.

ஏ.ஐ.பி.சி.,யின் இந்த முடிவுக்கு வரவேற்பும், எதிர்ப்பும் எழுந்துள்ளன.

Advertisement