மீண்டும் உடைந்தது உத்தவ் சிவசேனா: 6 எம்.பி.,க்கள் ஷிண்டே கட்சிக்கு தாவினர்
மும்பை: மஹாராஷ்டிராவில் சிவசேனா உத்தவ் பாலாசாகேப் கட்சியை சேர்ந்த ஆறு எம்.பி.,க்கள் நேற்று துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா கட்சியில் இணைந்தனர்.
மஹாராஷ்டிராவில் முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் தலைமையில் பா.ஜ., - சிவசேனா - தேசியவாத காங்., கூட்டணி ஆட்சி நடக்கிறது.
இங்கு, முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரேயின் உத்தவ் சிவசேனா கட்சி, பிரதான எதிர்க்கட்சிகளில் ஒன்றாக உள்ளது. இக்கட்சிக்கு 20 எம்.எல்.ஏ.,க்களும், ஒன்பது லோக்சபா எம்.பி.,க்களும் உள்ளனர்.
கடந்த 2022ல் ஒருங்கிணைந்த சிவசேனா பிளவுபட்டதால், புதுக்கட்சியை உத்தவ் தாக்கரே தொடங்கினார். கட்சியின் பெயர் மற்றும் சின்னம் துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே வசம் சென்றது.
இந்நிலையில், 'ஆப்பரேஷன் டைகர்' என்ற நடவடிக்கையின் கீழ், உத்தவ் சிவசேனா கட்சி எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் எம்.பி.,க்களை தங்கள் பக்கம் இழுக்கும் வேலைகளில், துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டேயின் சிவசேனா ஈடுபட்டுள்ளதாக கடந்த வாரம் தகவல் பரவியது.
இதனால், உத்தவ் தாக்கரே தலைமையில் கடந்த வாரம் அக்கட்சியின் எம்.பி.,க்கள் கூட்டம் அவசரமாக கூட்டப்பட்டது. மொத்தம் உள்ள ஒன்பது எம்.பி.,க்களில் மூன்று பேர் மட்டுமே அதில் பங்கேற்றனர். இதனால், ஆறு பேர் அதிருப்தி எம்.பி.,க்களாக மாறிவிட்டதாக பேசப்பட்டது.
இதை உறுதிப்படுத்தும் வகையில், அந்த ஆறு எம்.பி.,க்களான சஞ்சய் தினா பாட்டீல், சஞ்சய் தேஷ்முக், சஞ்சய் ஜாதவ், பவுசாஹேப் வக்சவுரே, நாகேஷ் பாட்டீல் மற்றும் ஓம்பிரகாஷ் ராஜே ஆகியோர் மஹாராஷ்டிரா துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே முன்னிலையில் நேற்று ஆளும் சிவசேனாவில் இணைந்தனர்.
இது குறித்து பேசிய ஏக்நாத் ஷிண்டே, ''ஒரு புலி அல்ல; ஆறு புலிகள் எங்கள் முகாமுக்கு வந்துவிட்டன. இம்முறை 'சிக்ஸர்' அடித்துவிட்டோம்,'' என கூறியுள்ளார். மூன்றில் இரு பங்கு எம்.பி.,க்கள் கட்சி மாறி இருப்பதால், கட்சி தாவல் தடைச் சட்டத்தின் கீழ் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட மாட்டாது என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும்
-
மனைவியை நிர்வாணப்படுத்தி சித்ரவதை; கணவர், கள்ளக்காதலி மீது வழக்கு பதிவு
-
துாத்துக்குடி யில் திடீர் சூறைக் காற்று: 100 வீடுகள் சேதம் அரிதான நிகழ்வு என வானிலை மையம் விளக்கம்
-
மாணவர்களின்றி 7.. ஒரே மாணவருடன் 4; மூடும் நிலையில் தேனி அரசு பள்ளிகள்
-
மகளுக்கு தொல்லை தந்த சித்தப்பாவுக்கு 'போக்சோ'
-
ரேஷனில் தே.எண்ணெய் வழங்கக்கோரி போராட்டம்
-
கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை