உலர் களம் இல்லாததால் சிக்கல்: கல்லாபுரத்தில் கவலை
உடுமலை: நெல்லை காய வைக்க உலர் களமும், இருப்பு வைக்க தேவையான குடோன் வசதி இல்லாததால், அறுவடை சீசனில் கல்லாபுரம் விவசாயிகள் பாதிக்கப்படுவது தொடர்கதையாக உள்ளது.
உடுமலை மற்றும் சுற்றுப்பகுதிகளில், விவசாயிகள் விளைபொருட்களை காய வைப்பதற்கான உலர் களங்கள், இருப்பு வைப்பதற்கான குடோன்கள் ஒழுங்கு முறை விற்பனை கூடங்களில் உள்ளன.
குறைந்தளவில் சாகுபடி மேற்கொள்ளும், சிறு, குறு விவசாயிகள், உடுமலையிலுள்ள ஒழுங்கு முறை விற்பனை கூடத்திற்கு வர முடிவதில்லை. எனவே, விளைநிலங்களின் அருகிலுள்ள பாறைகள் மற்றும் இதர பகுதிகளை, உலர் களமாக பயன்படுத்தி வருகின்றனர்.
சில கிராமங்களில், நீர்வள நில வள திட்டத்தின் கீழ், உலர் களம் மற்றும் சிறிய குடோன்கள் கட்டித்தரப்பட்டது.
ஆனால், ஆண்டு முழுவதும் நெல் சாகுபடி மேற்கொள்ளப்படும், அமராவதி மற்றும் கல்லாபுரம் கால்வாய் பாசனப்பகுதிகளில், விவசாயிகளுக்கு தேவையான உலர் களம் இல்லை.
ஒவ்வொரு சீசனிலும், நெற்பயிர்களை அறுவடை செய்த பின்னர், அவற்றை அமராவதி பாலத்தின் மீதுள்ள ரோட்டில், காய வைக்கின்றனர்.
எனவே, சிறு, குறு விவசாயிகள் அதிகமுள்ள பகுதிகளில், உலர் கள வசதியுடன் கூடிய குடோன்கள் கட்ட வேண்டும் என, கோரிக்கை விடப்பட்டுள்ளது.
விவசாயிகள் கூறுகையில், 'கல்லாபுரம் பகுதியில், ஊரக கிடங்குகளை அமைக்க வேண்டும். கிடங்கு இல்லாததால், விளைபொருட்களை சந்தைப்படுத்துவதில் நஷ்டம் ஏற்பட்டு வருகிறது. போதிய குடோன் வசதி இல்லாதததால், தற்காலிக நெல் கொள்முதல் மையத்தையும் இப்பகுதியில், செயல்படுத்துவதில் சிக்கல் ஏற்படுகிறது. எனவே, உலர்களம், குடோன் கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.