கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் தங்கும் விடுதி கட்டணம் ரூ.100 உயர்வு வெளியூர் பயணியர் அதிருப்தி

கிளாம்பாக்கம்: கிளாம்பாக்கம் பேருந்து முனையம் உள்ளே, தங்கும் விடுதி கட்டணம் 100 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளதற்கு, வெளியூர் பயணியர் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

சென்னையில் நிலவும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் நடவடிக்கையாக, வண்டலுார் அடுத்த கிளாம்பாக்கத்தில் 400 கோடி ரூபாயில் புதிய பேருந்து முனையம் அமைக்கப்பட்டது. இதை, சி.எம்.டி.ஏ., எனும் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் பராமரிக்கிறது.

கடந்த 2023 டிச., மாதத்தில் இருந்து செயல்படும் இந்த நிலைய வளாகத்தினுள், வெளியூரிலிருந்து சென்னை வரும் பயணியர் வசதிக்காக, இருபாலருக்குமான தங்கும் விடுதிகள் அமைக்கப்பட்டு உள்ளன.

பாதுகாப்பாகவும், குறைந்த செலவில் தங்கும் வசதியாகவும் நிலையத்தின் முதல் தளத்தில் இந்த விடுதிகள் அமைக்கப்பட்டுள்ளன.

ஒரே நேரத்தில், ஆண்கள் 150 பேரும், பெண்கள் 75 பேரும் தங்கலாம்; கழிப்பறைகள் வசதியும் உண்டு. விடுதியில் ஒருவர் தங்குவதற்கு 12 மணி நேரத்திற்கு 200 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்பட்ட நிலையில், தற்போது, சதவீதம் உயர்த்தி 300 ரூபாய் வசூலிக்கப்படுகிறது.

இந்த விடுதியை பராமரிக்க ஒப்பந்தம் எடுத்துள்ள பி.வி.ஜி., தனியார் நிறுவனம், திடீரென இந்த கட்டணத்தை உயர்த்தி உள்ளதற்கு, வெளியூர் பயணியர் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

மதுரையைச் சேர்ந்த தங்கசாமி என்ற பயணி கூறியதாவது:

சென்னைக்கு இரு மாதங்களுக்கு ஒருமுறை வருவேன். வரும்போதெல்லாம், கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் உள்ள விடுதியில் தங்கி செல்வேன்.

கடந்த இரு ஆண்டுகளாக, 200 ரூபாய் வசூலித்த நிலையில், தற்போது 300 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. அதன்படி, ஒரு நாளைக்கு 600 ரூபாய் கட்டணம் வசூல் செய்யப்படுகிறது. இது, தனியார் தங்கும் விடுதி கட்டணத்திற்கு இணையானது. இந்த கட்டண உயர்வு குறித்து, முதல்வரின் தனி பிரிவிற்கு புகார் அளித்துள்ளேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேருந்து முனைய சி.எம்.டி.ஏ., அதிகாரி கூறுகையில், ‘பி.வி.ஜி., நிறுவனம், தங்கும் விடுதிக்கான கட்டணத்தை உயர்த்தியது குறித்து எந்த தகவலும் எங்களுக்கு தெரிவிக்கவில்லை. விசாரிக்கப்படும்’ என்றார்.

பி.வி.ஜி., நிறுவன பொறுப்பாளர் கூறியதாவது:

கோடை காலம் என்பதால், ‘ஏர் கூலர்’ வசதி செய்யப்பட்டு உள்ளது. அந்த சேவையை பயன்படுத்தி கொள்ளும் பயணியருக்கு மட்டுமே, கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. மின் விசிறி பயன்படுத்துவோருக்கு 200 ரூபாய் மட்டுமே வசூலிக்கப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement