110 கிலோ குட்கா பறிமுதல் ஒரு பெண் உட்பட 4 பேர் கைது

கடலுார்: பதுக்கி வைக்கப்பட்டிருந்த 110 கிலோ குட்காவை பறிமுதல் செய்த போலீசார், ஒரு பெண் உட்பட, 4 பேரை கைது செய்தனர்.

கடலுார், தேவனாம்பட்டினம் பகுதியில் விற்பனைக்காக குட்கா பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில் தேவனாம்பட்டினம் சுனாமிநகரிலுள்ள ராமு மகன் கார்த்திக்ராஜன்,29; என்பவரின் வீட்டில் போலீசார் மேற்கொண்ட சோதனையில், 10 மூட்டைகளில் இருந்த, 110 கிலோ குட்கா பொருட்கள் சிக்கின.

அவரிடம் போலீசார் மேற்கொண்ட விசாரணையில், பெட்டிக்கடை நடத்தி வரும் அருள்தாஸ்,62; அவரது மனைவி கலைவாணி,55; மற்றும் வினோத்,24; ஆகியோருக்கும் தொடர்புள்ளது தெரிந்தது.

இதையடுத்து, 4 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து, 110 கிலோ குட்காவை பறிமுதல் செய்தனர்.

எஸ்.பி.,ஜெயக்குமார் மற்றும் டி.எஸ்.பி.,தமிழ்இனியன் பறிமுதல் செய்த குட்காவை பார்வையிட்டு, தேவனாம்பட்டினம் போலீசாரை பாராட்டினர்.

Advertisement