தொழில் தொடங்க விரைவாக அனுமதி முதல்வரிடம் சிறுதொழில் துறை கோரிக்கை

சென்னை: தமிழகத்தில் தொழில் தொடங்க விரைவாக அனுமதி அளிக்குமாறு முதல்வர் விஜயிடம், 'டான்ஸ்டியா' எனப்படும் தமிழக சிறு மற்றும் குறுந்தொழில்கள் சங்கத்தினர் வலியுறுத்தி உள்ளனர்.

சென்னை தலைமை செயலகத்தில், முதல்வர் விஜயை, சிறு மற்றும் குறுந்தொழில்கள் சங்க நிர்வாகிகள் நேற்று சந்தித்து, பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றி தருமாறு வலியுறுத்தினர்.

டான்ஸ்டியா தலைவர் வாசுதேவன் கூறியதாவது:

தமிழகத்தில் கடந்த நான்கு ஆண்டுகளாக சிறு, குறுந்தொழில்களுக்கு மின்சார நிலை கட்டணம், 400 மடங்கு உயர்ந்துள்ளது. இதனால், தொழில்களுக்கு ஏற்படும் இன்னல்களை முதல்வர் விஜயிடம் விளக்கி கூறி, மின்சார நிலை கட்டணத்தை குறைக்குமாறு வலியுறுத்தப்பட்டது.

மேலும், சொத்து வரியை குறைக்குமாறும், தொழில் தொடங்க எளிதில் அனுமதி அளிக்குமாறும், மாசு கட்டுப்பாட்டு வாரிய அனுமதியை எளிதாக்கி, அதை ஒற்றைச்சாளர முறையில் கொண்டு வருமாறும் தெரிவிக்கப்பட்டது. சிறு, குறுந்தொழில் நிறுவனங்களுக்கு நவீன வசதிகளுடன் தொழிற்பேட்டை அமைப்பதுடன், நில வகைப்பாடு மாற்றுதலை எளிதாக்கவும் வலியுறுத்தப்பட்டது.

வெள்ளம், புயல் போன்ற பேரிடர் காலங்களில் பாதிக்கப்படும் சிறு, குறுந்தொழில் நிறுவனங்களுக்கு உதவும் வகையில், அரசு சார்பில் மானியத்துடன் கூடிய காப்பீட்டு திட்டத்தை அமல்படுத்துமாறும், சூரியசக்தி மின் நிலையங்களை அமைக்க மூலதன மானியம் தருமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டது. துறை அதிகாரிகளுடன் கலந்து ஆலோசித்து, நிறைவேற்றி தருவதாக முதல்வர் விஜய் தெரிவித்தார்.

இவ்வாறு அவர் கூறினார்.

சிறு, குறு தொழில்களுக்கு 4 ஆண்டுகளில் 400 மடங்கு உயர்ந்த மின்சார நிலைக்கட்டணத்தை குறைக்க கோரிக்கை

Advertisement