குடிநீர் வடிகால் வாரிய தலைவருக்கு சர்வதேச பிரதிநிதிகள் பாராட்டு 

- நமது நிருபர் -

பெங்களூரில் நீர் முன்னெடுப்புகளை செயல்படுத்தும் முயற்சிக்காக, பெங்களூரு குடிநீர் மற்றும் வடிகால் வாரிய தலைவர் ராம்பிரசாத் மனோகரை, சர்வதேச பிரதிநிதிகள் பாராட்டி உள்ளனர்.

ஸ்பெயின் நாட்டின் தலைநகர் மாட்ரிட்டில் உலகளாவிய நீர் உச்சி மாநாடு - 2026 நடந்து வருகிறது. இந்த மாநாட்டில் பி.டபுள்யூ.எஸ்.எஸ்.பி., எனும் பெங்களூரு குடிநீர் மற்றும் வடிகால் வாரிய தலைவரும், தமிழ் ஐ.ஏ.எஸ்., அதிகாரியுமான ராம்பிரசாத் மனோகர் பங்கேற்று உள்ளார்.

இந்த மாநாட்டில், நீர் தொடர்பான மூன்று முக்கிய உலகளாவிய பிரிவுகளில் பெங்களூரு குடிநீர் மற்றும் வடிகால் வாரியம் இடம் பிடித்து உள்ளது.

மூன்று பிரிவுகளிலும் முதலிடம் பிடித்த ஒரே, இந்திய நீர் பயன்பாட்டு வாரியம் என்ற புதிய அங்கீகாரமும் கிடைத்து உள்ளது.

புதுமையான மற்றும் நிலையான நீர் மேலாண்மை நடை முறைக்காக பரவலான பாராட்டுகளும் கிடைத்து இருக்கிறது. நீர் பாதுகாப்பு, கழிவுநீர் மறுசுழற்சி, மறுபயன்பாடு, நிலையான நகர்ப்புற நீர் நிர்வாகம் ஆகியவற்றில், பெங்களூரு குடிநீர் மற்றும் வடிகால் வாரியம் சிறப்பாக செயல்படுவதாக, மாநாட்டில் அறிவிக்கப்பட்டு இருப்பது சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்து உள்ளது.

இது தவிர, பெங்களூரில் அதிகரித்து வரும் குடிநீர் தேவையை நிவர்த்தி செய்ய, செயல்படுத்தப்பட்ட காவிரி ஐந்தாவது கட்ட குடிநீர் திட்டத்திற்கும் நிறைய பாராட்டுகள் குவிந்து உள்ளன.

பெங்களூரின் நீர் மேலாண்மை உக்திகள் குறித்து, முன்னணி உலகளாவிய நிபுணர்கள், கொள்கை வகுப்பாளர்களுடன், ராம்பிரசாத் மனோகர் உரையாடினார்.

உலகில் அதிவேகமாக வளர்ந்து வரும் பெங்களூரு நகரில் தொழில்நுட்ப அடிப்படையில் நீர் முன்னெடுப்புகளை செயல்படுத்துவதில் மேற்கொண்ட முயற்சிக்காக, ராம்பிரசாத் மனோகரை, சர்வதேச பிரதிநிதிகள் வெகுவாக பாராட்டினர்.

முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமாரின் தொலை நோக்கு பார்வையின் கீழ், பெங்களூரு குடிநீர் மற்றும் வடிகால் வாரியம் செயல்பட்டு வருவதாகவும், பெங்களூரு மக்களுக்கு உலக தரம் வாய்ந்த சேவைகளை வழங்குவதில் அர்ப்பணிப்புடன் செயல்படுவோம் என்றும், மாநாட்டில் ராம்பிரசாத் மனோகர் பேசினார்.

Advertisement