காஞ்சியில் விதிகளை மீறி செயல்பட்ட 2 அதிகாரிகள்... சஸ்பெண்ட்! காலையில் டெண்டர்; மாலையில் 'ஆர்டர்' தந்து அசத்தல்
காஞ்சிபுரம்: மேல்நிலை குடிநீர் தொட்டி கட்ட, காலையில் 'டெண்டர்' விட்டு, மாலையில் பணி ஆணை வழங்கி, விதிமுறைகளை மீறி, 'சுறுசுறுப்பு'டன் செயல்பட்ட, காஞ்சிபுரம் வட்டார வளர்ச்சி அதிகாரிகள் இருவர் அதிரடியாக, 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளனர். முறையான அறிவிப்பு வெளியிடாமலும், ஒப்பந்ததாரர்கள் பங்கேற்க, போதிய அவகாசம் வழங்காமலும், கல்லா கட்ட முயன்றதாக, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில், காஞ்சிபுரம், வாலாஜாபாத், உத்திரமேரூர், ஸ்ரீபெரும்புதுார், குன்றத்துார் ஆகிய ஐந்து ஒன்றியங்களில், 274 ஊராட்சிகள் உள்ளன. இதில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, வட்டார வளர்ச்சி அலுவலகம், ஊராட்சிகள் ஆகிய மூன்று இடங்களில், நிதி ஒதுக்கீட்டிற்கு ஏற்ப, உள்ளாட்சி நிர்வாகங்களில், வளர்ச்சி பணிகளுக்கு 'ஆன்லைன்' வழியே, 'டெண்டர்' விடப்படுகிறது.
ஒப்பந்தம் கோரும் நபர்கள், ஆன்லைன் டெண்டரில் பங்கேற்கலாம். அவர்களில் குறைந்த தொகைக்கு ஒப்பந்தம் கேட்பவருக்கு, பணி ஆணை வழங்கப்படும். டெண்டர் கோருவதற்கு, வழிகாட்டி நெறிமுறைகளை, அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, ஒரு பணிக்கு ஆன்லைனில் டெண்டர் கோரப்பட்டாலும், சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலர், ஒரு வாரத்திற்கு முன், அறிவிப்பு பலகையில், டெண்டர் குறித்த விபரத்தை வெளியிட வேண்டும்.
சமீபத்தில், காஞ்சிபுரம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில், கோனேரிகுப்பம் ஊராட்சிக்குட்பட்ட, காரப்பேட்டை கிராமத்தில், 2025 - 26ம் ஆண்டு, 15வது மானிய நிதி திட்டத்தின் கீழ், 16.83 லட்சம் ரூபாய் மதிப்பில், 30,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட, மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்ட, ஆன்லைன் வழியே, நேற்று முன்தினம் டெண்டர் கோரப்பட்டது.
இது குறித்த விபரங்களை, சம்பந்தப்பட்ட காஞ்சிபுரம் வட்டார வளர்ச்சி அலுவலர், காஞ்சிபுரம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநருக்கு தெரிவிக்கவில்லை. அரசு விதிமுறைகளின்படி, ஆன்லைன் டெண்டரில் பங்கேற்க, விருப்பம் உள்ளவர்களுக்கு, ஏழு நாட்கள் வாய்ப்பு தர வேண்டும். இதன்படி, 19ம் தேதி டெண்டர் இறுதி நாள் என்றால், 12ம் தேதி அறிவிப்பு வெளியிட்டு, ஒப்பந்த புள்ளி கோரியிருக்க வேண்டும்.
ஆனால், நேற்று முன்தினம் காலையில் ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு, அன்று மாலையே ஒப்பந்தப்புள்ளி அளிப்பதற்கான கால அவகாசம் முடிக்கப்பட்டது. அத்துடன் ஆறு மணி நேரத்தில், பணி ஆணையும் வழங்கப்பட்டுள்ளது. இது மாநிலம் முழுதும், பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஒரே நாளில், டெண்டர் விட்டு, பணி ஆணை வழங்கியது எப்படி என்ற கேள்வி எழுந்தது.
இது குறித்து, ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி, டெண்டரை ரத்து செய்தனர். அதைத் தொடர்ந்து, டெண்டர் விதிமுறைகளை முறையாக கடை பிடிக்க தவறிய, காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றிய முன்னாள் வட்டார வளர்ச்சி அலுவலரும், தற்போதைய வாலாஜாபாத் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலருமான கே.சாந்தி, காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றிய உதவிப் பொறியாளர் எல்.கயல்விழி ஆகியோர் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டனர். இதற்கான உத்தரவை, ஊரக வளர்ச்சி திட்ட இயக்குநர் ஆர்த்தி பிறப்பித்துள்ளார்.
இதுகுறித்து, ஊரக வளர்ச்சி துறை திட்ட இயக்குநர் ஆர்த்தி கூறியதாவது:
ஒரு பணிக்கு டெண்டர் கோரும்முன், ஒரு வாரத்திற்கு முன் முறையாக அறிவிப்பு பலகையில் வெளியிட வேண்டும். அவ்வாறு வெளியிடவில்லை.
ஆன்லைன் மூலம் கடைசி நேரத்தில்தான் ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது. இரு செயல்களும் துறை ரீதியான விதிமீறல்தான். ஆகையால்தான் இருவரும், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
@block_B@ ஊழியர்கள் முறைகேடு? காஞ்சிபுரம் அரசு ஊழியர்கள் சங்க தலைவர் ஜெ.பாலாஜி கூறியதாவது: காஞ்சிபுரம் கிராம ஊராட்சிகளை கண்காணித்து வந்த வட்டார வளர்ச்சி அலுவலர் சாந்தி, மாநில ஊரக வளர்ச்சி முகமை அலுவலராக பணிபுரிந்து வந்தவர். இவர், ஓராண்டு கிராம ஊராட்சிகள் நிர்வாகம், ஓராண்டு வட்டார நிர்வாகம் என, இரு ஆண்டுகள், காஞ்சிபுரம் மாவட்ட வட்டார வளர்ச்சி அலுவலராக பயிற்சி பெற்றுள்ளார். பயிற்சி முடித்து, அவர் மீண்டும் மாநில ஊரக வளர்ச்சி முகமைக்கு திரும்ப வேண்டும். இந்நிலையில், காஞ்சியில் கிராம ஊராட்சிகளை கண்காணிக்கும் வட்டார வளர்ச்சி அலுவலராக பணியாற்றிய சாந்தியை, மே- 12ம் தேதி, வாலாஜாபாத் வட்டாரத்தில், கிராம ஊராட்சிகள் கண்காணிக்கும் வட்டார வளர்ச்சி அலுவலராக இடமாறுதல் செய்யப்பட்டார். அவ்வாறு இருக்கும்போது, அவர் எப்படி டெண்டர் விடுவதற்கு அனுமதி அளித்திருப்பார். அவரின், 'கீ' காஞ்சிபுரம் வட்டார வளர்ச்சி அலுவலக ஊழியர்கள் சிலர், முறைகேடாக பயன்படுத்தி உள்ளனர். இதை ஊரக வளர்ச்சி துறையினர், முறையாக ஆய்வு செய்து, இந்த முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.block_B
மேலும்
-
ஜூன் 18ல் ராஜ்யசபா இடைத்தேர்தல்; தவெகவுக்கு ஜாக்பாட்
-
முதல்வர் விஜய் அமைச்சரவை விரிவாக்கம்; விசிக, முஸ்லிம் லீக் அமைச்சர்கள் பதவியேற்பு
-
ஹோண்டுராஸில் இரு இடங்களில் துப்பாக்கிச்சூடு; 6 போலீசார் உள்பட 25 பேர் சுட்டுக்கொலை
-
இந்தியாவின் சந்திரயான்-3 திட்டம்; அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனம் விருது வழங்கி கவுரவிப்பு
-
நாமக்கல் மாவட்டத்திற்கு நான்கு அமைச்சர்
-
கோவைக்கு 2 அமைச்சர்களை தந்து முதல்வர் விஜய் அதிர்ச்சி வைத்தியம்; வேலுமணியின் அமைச்சராகும் கனவு தவிடுபொடி