ஓசூர் 'அவுட்டர் ரிங்ரோடு' பணி தாமதம் ரூ.320 கோடி ஒதுக்கியும் வேகம் இல்லை

ஓசூர்: ஓசூர் அவுட்டர் ரிங்ரோடு பணியில், தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் தீவிரம் காட்டாததால், 320 கோடி ரூபாய் ஒதுக்கியும், போக்குவரத்து நெரிசலில் சிக்கி, மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் நகரின் போக்குவரத்து நெரிசலை குறைக்க, மாநில எல்லையான ஜூஜூவாடியில் தொடங்கி, பேரண்டப்பள்ளி வரை, 18 கி.மீ., துாரத்திற்கு, அவுட்டர் ரிங்ரோடு அமைக்க, தி.மு.க., அரசு, கடந்தாண்டு, 320 கோடி ரூபாயை ஒதுக்கியது.

மாநில நெடுஞ்சாலைத்துறையின் கட்டுமானம் மற்றும் பராமரிப்புத்துறை, சாலை பணியில் இறங்கியது. ஆனால், சில மாதங்களுக்கு முன், மாநில நெடுஞ்சாலைத்துறை ஆணையம், சாலை பணிகளை செய்யும் என, அரசு அறிவித்தது. ஆனால், இச்சாலையில் வரும், 11 கிராமங்களில், சில கிராமங்களில் இன்னும் நிலம் எடுப்பு பணியே முடியவில்லை.

தற்போது, பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையிலுள்ள ஓசூர் பத்தலப்பள்ளி பகுதியில், மேம்பால பணிகள் நடப்பதால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

ஓசூர் அவுட்டர் ரிங்ரோடு அமைத்திருந்தால், வாகனங்களை திருப்பி விட்டிருக்கலாம். அலட்சியத்தால், அவுட்டர் ரிங்ரோடு பணியே இன்னும் தொடங்கவில்லை.

தினமும், பல ஆயிரம் மக்கள், போக்குவரத்து நெரிசலில் சிக்கி, அரை மணி நேரத்திற்கு மேலாக போராடி, பத்தலப்பள்ளி பகுதியை கடக்கின்றனர்.

கடந்த, 2025 ஜூன் மாதம், பழுதான ஓசூர் பஸ் ஸ்டாண்ட் மேம்பாலத்தை பார்வையிட்ட மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார், ''ஓசூர் அவுட்டர் ரிங்ரோட்டிற்கு, 20 நாட்களில் நிலம் எடுப்பு பணி முடிந்து விடும். சாலை பணி மிக விரைவில் தொடங்கும்,'' என்றார்.

ஆனால், இன்னும் அதே நிலை தான் இருப்பதாக, மாநில நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.

தமிழக அரசு மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் அலட்சியத்தால், ஓசூர் நகரம் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிப்பதாக, வாகன ஓட்டிகள் புலம்புகின்றனர்.

Advertisement