கல்வியை உலக தரத்துக்கு உயர்த்த தமிழக முதல்வருக்கு சில பரிந்துரைகள்!

9

- ஜெயபிரகாஷ் காந்தி -
கல்வியாளர்

தமிழக கல்வி முறையை உலக தரத்திற்கு உயர்த்தவும், லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு அதிநவீன வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் ஒரு பிரமாண்ட தொலைநோக்கு திட்ட வரைவை, தமிழக முதல்வர் விஜய்க்கு பரிந்துரைக்கிறேன். அதன் விபரம்:

* அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள் எழுதும், 'நீட், ஜே.இ.இ., கிளாட், நிப்ட், க்யூட்' ஆகிய அனைத்து தேசிய அளவிலான தேர்வுகளுக்கான கட்டணத்தையும் அரசே முழுமையாக ஏற்க வேண்டும். இது, ஏழை மாணவர்களின் மனதில் இருக்கும், நிதி சார்ந்த அச்சத்தை போக்கும்

* கிராமப்புற மற்றும் பின்தங்கிய பகுதிகளில் உள்ள மாணவர்களுக்காக, 'ஒரு பள்ளிக்கு ஒரு வாகனம்' என்ற கொள்கையின் கீழ், பள்ளி வாகனங்களை அறிமுகப்படுத்த வேண்டும்.

* குறிப்பாக, மாணவியரின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளித்து, 'ராணி வேலு நாச்சியார் படை' உடன் இணைக்கப்பட்ட பாதுகாப்பு செயலி மூலம் வாகனங்களை கண்காணிக்க வேண்டும்

* கல்லுாரிகளில் பொழுதுபோக்கு மற்றும் கலாசார விழாக்களுக்காக செய்யப்படும் ஆடம்பர செலவுகளை முறைப்படுத்த வேண்டும். சிறப்பு நிதியில் குறைந்தது, 60 சதவீத தொகையை திறன் ஆய்வகங்கள், வேலைவாய்ப்பு பயிற்சிகளுக்கு கட்டாயம் செலவிட வேண்டும்

* உலகளாவிய தேவைகளுக்கு ஏற்ப, பி.டெக்., செமி கண்டக்டர் தொழில்நுட்பம், பி.டெக்., காலநிலை தொழில்நுட்பம் மற்றும் நிலையான ஆற்றல் படிப்பு, பி.டெக்., ராணுவம் மற்றும் விண்வெளி ஆய்வு ஆகிய பட்டப்படிப்புகளை அறிமுகப் படுத்த வேண்டும்

* தமிழகத்தின் அனைத்து ஆசிரியர்களும் இரு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஐ.ஐ.டி., மெட்ராஸ் அல்லது அண்ணா பல்கலை வழிகாட்டுதலின் கீழ், கட்டாய தொழில்நுட்ப தழுவல் திட்டத்தின் மூலம், 'ஏ.ஐ., தொழில்நுட்பத்தை கொண்டு கற்பித்தல்' என்ற பயிற்சியை பெற வேண்டும்

* ஒவ்வொரு அரசு பொறியியல் கல்லுாரியையும், ஏ.ஆர்.,/வி.ஆர்., ஆய்வகங்கள், 3டி பிரின்டிங் வசதிகளுள்ள, 'மினி -டெக் ஹப்' ஆக மாற்ற வேண்டும்
Latest Tamil News
* 10ம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வு முறைகளை மாற்றி அமைக்க வேண்டும். முழு மதிப்பெண் பெற உயர் சிந்தனை திறன், பயன்பாட்டு அடிப்படையிலான கேள்விகளை, வழக்கு ஆய்வுகளுக்கு விடையளிக்கும் வகையில் மாற்றி அமைக்க வேண்டும். இது, மனப்பாடம் செய்யும் முறையை வேரறுக்கும்

* எட்டாம் வகுப்பு முதலே, மாதத்திற்கு ஒருமுறை பிரத்யேக, 'ஆப்டிடியூட் ஹவர்' அறிமுகப்படுத்த வேண்டும். இது, மாணவர்கள் பட்டப்படிப்பை முடிப்பதற்கு முன்பே, கார்ப்பரேட் நிறுவனங்களின் வேலைவாய்ப்பு தேர்வுகள், யு.பி.எஸ்.சி., - டி.என்.பி.எஸ்.சி., போன்ற அரசு தேர்வுகளுக்கு தயாராக உதவும்

* ஏ.ஐ., மேலாண்மை, வினியோகத் தொடர் தளவாடங்கள், பின்டெக் போன்ற துறைகளில், சிறப்பு எம்.பி.ஏ., படிப்புகளை வழங்க, 'தமிழக இன்ஸ்டிடியூட் ஆப் டெக்- மேனேஜ்மென்ட்' உருவாக்க வேண்டும்

* மூன்று மாத கால சரிபார்க்கப்பட்ட, 'இன்டர்ன்ஷிப்' இல்லாமல் எந்தவொரு மாணவருக்கும் பட்டம் வழங்கக் கூடாது. ஏழை எளிய மாணவர்களுக்கு, வெற்றி திறன் பயிற்சி உறுதித் திட்டத்தின் மூலம், 8,000 - 10,000 ரூபாய் வரை, அரசு உதவித்தொகை வழங்க வேண்டும்

* பெற்றோரும், திறன் சார்ந்த நவீன வேலைவாய்ப்புகளை புரிந்து கொள்வதற்காக, ஒவ்வொரு பஞ்சாயத்திலும், 'தொழில் நெறி வழிகாட்டுதல் மையங்கள்' அமைக்க வேண்டும்

* தமிழக ஆள்சேர்ப்புக்கான பொறுப்பு மற்றும் வெளிப்படைத்தன்மை சட்டத்தை கொண்டு வர வேண்டும். இதன் வாயிலாக, வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடுவது முதல், பணி நியமன ஆணை வழங்குவது வரையிலான அனைத்து அரசு பணி தேர்வு சுழற்சிகளையும் 365 நாட்களுக்குள் முடிக்க வேண்டும். இது, இளைஞர்களின் பொன்னான கால விரயத்தை தடுக்கும்

* தனியார் முன்னணி நிறுவனங்களுடன் இணைந்து, ஆண்டுதோறும், ஐந்து லட்சம் இளைஞர்களுக்கு உதவித்தொகையுடன் கூடிய பயிற்சி வழங்க வேண்டும்

* தமிழகத்தைச் சேர்ந்த 75 சதவீத தொழிலாளர்களை பணியமர்த்தும் தனியார் நிறுவனங்களுக்கு, மின்சார மானியங்கள் வழங்கி ஊக்கப்படுத்த வேண்டும்.

* குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள், 'ஆட்டோமேஷன்' போன்ற நவீன தொழில்நுட்பங்களை நோக்கி மாற, அரசு மானியங்களை வழங்க வேண்டும்

* ஜெனரேட்டிவ் ஏ.ஐ., மற்றும் ரோபோடிக்ஸ் துறைகளை மட்டுமே மையமாக வைத்து, பிரத்யேக ஏ.ஐ., சிட்டியை உருவாக்க வேண்டும்.

* விவசாயம் முதல் சுகாதாரம் வரையிலான அனைத்து துறைகளிலும் தரவுகளை பயன்படுத்தி செயல்திறனை அதிகரிக்கவும், புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கவும், ஏ.ஐ., அமைச்சகத்தை உருவாக்க வேண்டும்

* கம்ப்யூட்டர் சயின்ஸ், ஐ.டி., துறைகளை நோக்கி மட்டுமே ஓடாமல், மெக்கானிக்கல், சிவில், எலக்ட்ரிக்கல் போன்ற இன்ஜினியரிங் படிப்புகளுக்கு அரசு ஊக்கத்தொகை வழங்க வேண்டும்

* அரசு சேவைகளை டிஜிட்டல் மயமாக்கவும், அவற்றை மக்களின் வீட்டுக்கே கொண்டு சேர்க்கவும், 5 லட்சம் இளைஞர்களை, 18,000 ரூபாய் சம்பளத்தில் சேவை உதவியாளர்களாக பணியமர்த்த வேண்டும். இது, உடனடி வேலைவாய்ப்பை வழங்குவதோடு, ஒரு பிரமாண்ட டிஜிட்டல் நிர்வாக தரவுத்தளத்தை உருவாக்கும்.

'நீட்' தேர்வு உட்பட எந்தவொரு தேசிய தேர்விலும், தமிழக பாடத்திட்ட மாணவர்கள் இயல்பாகவே முன்னணி இடத்தை பிடிக்கும் அளவுக்கு, தரம் வாய்ந்த ஒரு கல்வி முறையை நாம் உருவாக்க வேண்டும். அதுவே முதல்வர் விஜயின் அரசுக்கு கிடைக்கும் உண்மையான வெற்றி.

Advertisement