பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் கடலுார், விழுப்புரம் மாவட்டம்... பின் தங்கியது: ஆண்டுக்காண்டு தேர்ச்சி குறைவதால் பெற்றோர் அதிர்ச்சி
கடலுார், விழுப்புரம் மாவட்டத்திற்கு, கடந்த காலங்களில் சிறந்த கல்வியாளர்களை உருவாக்கிய பெருமை உண்டு. ஆனால், சமீப ஆண்டுகளாக, பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 அரசு பொதுத்தேர்வுகளில் மாநில அளவில் பின்தங்கி வருகிறது.
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச், 11ம் தேதி துவங்கி, ஏப். 6 வரை நடந்தது. கடலுார் மாவட்டத்தில் 439 பள்ளிகளில் இருந்து 17,214 மாணவர்கள், 15,386 மாணவிகள் உட்பட 32,600 பேர் எழுதினர். நேற்று 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள்வெளியானது. இதில், மாவட்டத்தில் 15,865 மாணவர்கள், 14,852 மாணவிகள் உட்பட 30,717 பேர் தேர்ச்சிபெற்றனர். மொத்த தேர்ச்சி சதவீதம் 94.22 ஆகும். இதில், மாணவர்கள் 92.16, மாணவிகள் 96.53 தேர்ச்சி சதவீதம் ஆகும்.
மாவட்டத்தில், 10ம் வகுப்பு தேர்ச்சி சதவீதம் 2023-24ம் ஆண்டில் 92.63 சதவீதமாகவும், கடந்த ஆண்டு 1.88 சதவீதம் அதிகரித்து 94.51 ஆகவும்இருந்தது.
நடப்பாண்டில் 0.29 சதவீதம் குறைந்துள்ளது. மாநில அளவில் தேர்ச்சி சதவீதத்தில் கடலுார் மாவட்டம் 2023-24ம் ஆண்டில் 19வது இடமும், கடந்தஆண்டில், 20வது இடமும் பெற்றிருந்த நிலையில் நடப்பாண்டில் மேலும் ஒரு இடம் பின்தங்கி 21வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
அரசுப்பள்ளிகள் தேர்ச்சி சதவீதத்திலும் 2023-24ம் ஆண்டில் 91.51 சதவீதத்துடன் 11வது இடமும், கடந்த ஆண்டு 93.79 சதவீதத்துடன் 14வது இடமும் பெற்றிருந்தநிலையில், நடப்பாண்டில் 93.19 சதவீதத்துடன் 18வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.மாவட்ட அளவில் தேர்வு எழுதிய 439 பள்ளிகளில் 204 பள்ளிகள் நுாறு சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதில் 86 அரசுப்பள்ளிகள், 8 அரசு நிதியுதவி பெறும்பள்ளிகள், 110 தனியார் பள்ளிகள் அடங்கும்.
விழுப்புரம் விழுப்புரம் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை 241 அரசு பள்ளிகள் உட்பட மொத்தம் 362 பள்ளிகளை சேர்ந்த 12,050 மாணவர்கள், 11,331 மாணவிகள் என, 23,381 பேர் எழுதினர். இதில், 10,026 மாணவர்கள், 10,496 மாணவிகள் என, மொத்தம் 20, 522 பேர் தேர்ச்சி பெற்றனர். இதன் மூலம் மாவட்டத்தின் தேர்ச்சி சதவீதம் 87.77 ஆகும்.
54 அரசு பள்ளிகள் மற்றும் ஆதிதிராவிடர் நல பள்ளிகள், 49 நிதியுதவி, தனியார் பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது. கடந்த கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு தேர்வில் மாநில அளவில் விழுப்புரம் மாவட்டம் 15வது இடத்திலும், அரசு பள்ளிகள் அளவில் 10வது இடத்திலும் இருந்தது. ஆனால் நடப்பாண்டில் மாநில அளவில் விழுப்புரம் மாவட்டம் 36வது இடத்திலும், அரசு பள்ளிகள் அளவில் 35வது இடத்திலும் பின் தங்கியுள்ளது. இதே போன்று, பிளஸ் 2 பொதுத்தேர்வில் விழுப்புரம் மாவட்டம் மாநில அளவில் 38வது இடத்திற்கு பின்தங்கியது குறிப்பிடத்தக்கது.
கடலுார், விழுப்புரம் மாவட்டத்தில், பிளஸ்2 பொதுத்தேர்வை தொடர்ந்து, பத்தாம் வகுப்பு தேர்விலும், தேர்ச்சி சதவீதம் பின்தங்கி வருவது பெற்றோர் மற்றும் கல்வியாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து முதன்மை கல்வி அலுவலர் அறிவழகன் கூறுகையில், 'விழுப்புரம் மாவட்டத்தில் 20 அரசு பள்ளிகளில் மட்டுமே அதிகப்படியான மாணவர்கள் தோல்வியடைந்துள்ளனர். தலைமை ஆசிரியர்களிடம் தோல்விக்கான காரணம் குறித்து விளக்கம் பெறப்படும். தொடர்ந்து, இந்த பள்ளிகளில் தேர்ச்சி சதவீதம் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும். விழுப்புரம் மாவட்டம் வரும் கல்வியாண்டில் பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழக அளவில் முதன்மையான இடத்தை பிடிக்க நடவடிக்கை தீவிரப்படுத்தப்படும்' என்றார்.
எனவே, கடலுார், விழுப்புரம் மாவட்டத்தில் அரசு பொதுத்தேர்வில் தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்க, புதியதாக பொறுப்பேற்றுள்ள அரசு அதிரடி நடவடிக்கையில் இறங்க வேண்டும் என்றும், மாவட்ட நிர்வாகமும் இதில் தீவிர கவனம் செலுத்த வேண்டும் என்றும் பெற்றோர் எதிர்பார்க்கின்றனர்.
மேலும்
-
மங்களம் மெட்ரிக் பள்ளி 10ம் வகுப்பு தேர்வில் 100 சதவீத தேர்ச்சி
-
சரஸ்வதி வித்யாலயா மெட்ரிக் பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை
-
எஸ்.டி., ஈடன் மெட்ரிக் பள்ளி 100 சதவீத தேர்ச்சி பெற்று அசத்தல்
-
12 ஆண்டுகளாக 100 சதவீதம் தேர்ச்சி அரசு பள்ளி தொடர் அசத்தல்
-
பெண்ணிடம் சீண்டிய டாக்டர் கைது
-
கிராவல் மண் லாரி கவிழ்ந்து விபத்து லாரி டிரைவர் படுகாயம்