துரோகம் இழைத்த காங்., காணாமல் போய்விட்டது தி.மு.க., அமைப்பாளர் சிவா காட்டம்

புதுச்சேரி: தி.மு.க.,வுக்கு துரோகம் இழைத்த காங்., கட்சி காணாமல் போய்விட்டது என தி.மு.க., அமைப்பாளர் சிவா பேசினார்.

புதுச்சேரி காமராஜர் சாலையில் நடந்த தி.மு.க., செயற்குழு கூட்டத்தில் அவர் பேசியதாவது:

ஜனநாயகத்தில் வெற்றி தோல்வி சகஜம். தமிழகத்தில் அற்புதமான ஆட்சியை தி.மு.க., தலைவர் கொடுத்தார். இந்தியாவுக்கே முன்மாதிரி முதல்வர் என்றார்கள். மக்களை தேடித்தேடி சென்று திட்டங்களை சேர்த்தார். புதுச்சேரி சட்டசபை தேர்தலில் நம்முடைய தலைமை வழிகாட்டிய படியே சென்றோம். ஆனால் காங்., கட்சியினர் நாம் ஒரு சீட் கூட தேரமாட்டோம் என முன்கூட்டியே முடிவு செய்து பல்வேறு இன்னல்களை கொடுத்தனர்.

இருப்பினும் கூட்டணி உறுதியான நிலையில், 15 நாட்களில் வேறு எந்தவேலையையும் பார்க்க முடியவில்லை. கூட்டணி பேசுவதிலேயே நாட்கள் ஓடியதால் மிகப்பெரிய சிரமங்களை எல்லாம் சந்தித்தோம். நான் என்னுடைய தொகுதியை கோட்டைவிட காரணம் அங்கு கவனம் செலுத்தாமல் கூட்டணி வேலையை பார்த்தது தான்.

வரலாறு மிக்க கட்சியின் தலைமை சரியான முடிவெடுக்காமல் மோசடி செய்து அவர்கள் தோல்வி அடைந்தனர். தி.மு.க., வுக்கு துரோகம் இழைத்த காங்., இன்று காணாமல் போய்விட்டது. ஆனால் நாம் 5 தொகுதிளில் வெற்றி பெற்றுள்ளோம். என்.ஆர்.காங்கிரஸ் சிறந்த ஆட்சி, சிறந்த முதல்வர் என்றெல்லாம் வாக்களிக்கவில்லை. அவர்கள் ஆட்சியை பிடிக்க காரணமாக இருந்த வைத்திலிங்கம், நாராயணசாமி, காங்., கட்சிக்கு நன்றி சொல்ல வேண்டும். நமக்கு 5 எம்.எல்.ஏ.,க்கள் கிடைத்துள்ளனர். தி.மு.க., வின் குரல் சட்டசபையில் மக்களின் குரலாக எதிரொலிக்கும்.

இவ்வாறு பேசினார்.

Advertisement