22, 26ல் கோட்ட அளவில் விவசாயிகள் நலன் கூட்டம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் கோட்ட அளவிலான விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம், 22, 26ம் தேதிகளில் நடைபெற உள்ளது.

இதுகுறித்து காஞ்சிபுரம் கலெக்டர் சினேகா வெளியிட்ட செய்திக்குறிப்பு:

காஞ்சிபுரம் மாவட்டத்தில், மே மாதத்திற்கான கோட்ட அளவிலான விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம், காஞ்சிபுரம் சப் - கலெக்டர் தலைமையில், சப் - கலெக்டர் அலுவலகத்தில், 22ம் தேதி காலை 11:00 மணிக்கும், ஸ்ரீபெரும்புதுார் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் 26ம் தேதி, காலை 11:00 மணிக்கு, கோட்டாட்சியர் தலைமையிலும் நடைபெற உள்ளது.

விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் கூட்டத்தில் பங்கேற்று வேளாண்மை தொடர்பான தங்கள் கோரிக்கைகளை தெரிவிக்கலாம்.

பிரதமரின் கௌரவ நிதி திட்டம் உள்ளிட்ட அரசின் நலத்திட்டங்களை பெறுவதற்கு தனித்துவ விவசாய அடையாள எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

எனவே, காஞ்சிபுரம் மாவட்ட விவசாயிகள் அனைவரும் தங்களுடைய ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட மொபைல் மற்றும் கணினி சிட்டா ஆகியவற்றை எடுத்து சென்று, அருகில் உள்ள வேளாண்மை துறை அலுவலகத்தையோ, பொது சேவை மையத்தையோ அணுகி மே 31க்குள் தனித்துவ விவசாய அடையாள எண்ணுக்காக பதிவு செய்து கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement