காஞ்சிபுரம் பஸ் நிலைய 19 ஏக்கர் இடம் வழக்கு சர்வே செய்ய கூடுதல் அவகாசம் கேட்பு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் பேருந்து நிலைய இடம் தொடர்பான வழக்கில், பாலிடெக்னிக் கல்லுாரி அமைந்த இடத்தை சர்வே செய்ய, இரு தரப்பும் நீதிமன்றத்தில் கூடுதல் அவகாசம் கேட்டுள்ளன.

காஞ்சிபுரம் நகருக்கான புதிய பேருந்து நிலையம், பொன்னேரிக்கரை பகுதியில் அமைக்க, மாவட்ட நிர்வாகம் முடிவு செய்தது. அங்குள்ள, 19 ஏக்கர் இடத்தை தேர்வு செய்த மாவட்ட நிர்வாகம் அதற்கான உத்தரவுகளை கடந்தாண்டு பிறப்பித்தது.

ஆனால், பக்தவத்சலம் பாலிடெக்னிக் அறக்கட்டளை அந்த இடத்தை உரிமை கோருகிறது.

இவ்வழக்கு, சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்தது. தற்போது உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நடக்கிறது.

புதிய பேருந்து நிலையம் கட்ட 35 கோடி ரூபாயில் டெண்டர் பணிகளும் முடிந்தது. வழக்கில் உள்ள 19 ஏக்கர் இடத்தை பாலிடெக்னிக் தரப்பிலும், மாநகராட்சி தரப்பிலும் சர்வே செய்து, அறிக்கை தர உச்ச நீதிமன்றம் உத்தரவிடப்பட்டது.

இடத்தை சர்வே செய்ய, சென்னை பெருநகர போக்குவரத்து திட்டத்தின் உறுப்பினர் செயலர் ஜெயகுமார் உள்ளிட்ட இருவர் நியமிக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில், கடந்த 12ம் தேதி மீண்டும் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, இரு தரப்பிலும் கூடுதல் அவகாசம் கேட்கப்பட்டிருப்பதாக, காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் மகாலட்சுமி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மாநகராட்சி மேயர் மகாலட்சுமியிடம் கேட்டபோது, 'சம்பந்தப்பட்ட இடத்தை சர்வே செய்யும் பணிகள் இன்னும் முடியாததால், இரு தரப்பிலும் கூடுதல் அவகாசம் கேட்கப் பட்டுள்ளன.

'அடுத்த நீதிமன்ற விசாரணை ஜூலைக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும், காஞ்சிபுரம் மாநகராட்சி கூட்டம் மே மாதம் கிடையாது. ஜூனில் நடத்த ஆலோசித்து வருகிறோம்' என்றார்.

Advertisement