கழிப்பறை கதவு உடைந்து தொங்குது; தண்ணீர் வருவதில்லை காந்திபுரம் துாய்மை பாரதம் கழிப்பறையில் பராமரிப்பு மோசம்

கோவை: காந்திபுரத்தில் உள்ள துாய்மை பாரதம் திட்ட கழிப்பறை பராமரிப்பு படுமோசமாக இருக்கிறது. கதவு உடைந்து கிடக்கிறது; தண்ணீர் வருவதில்லை; கண்ணாடி இல்லை. தொற்று நோய் வந்தால், மாநகராட்சியே பொறுப்பு.

காந்திபுரம் டவுன் பஸ் ஸ்டாண்ட் அருகே மத்திய அரசின் நிதியில் துாய்மை பாரதம் திட்டத்தில் பொது கழிப்பறை கட்டப்பட்டது. ஆண்கள், பெண்களுக்கு தனித்தனி கழிப்பறை மற்றும் குளியலறை கட்டப்பட்டுள்ளது. தனியார் ஸ்டார் ஹோட்டல்களில் இருப்பதை போல் பளபளவென இருந்தது. பொதுமக்கள் ஆச்சரியப்பட்டனர்.

மத்திய அரசின் உத்தரவால் கட்டணமும் வசூலிக்கவில்லை. இலவசமாக அனுமதிக்கப்பட்டனர். பராமரிப்பு எப்படி இருக்கிறது என்பதை மாநகராட்சி கவனத்துக்கு தெரிவிக்க க்யூஆர் கோடு அறிமுகம் செய்யப்பட்டது.

தி.மு.க., ஆட்சியில் அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் விட்டு விட்டனர். பராமரிப்பு படுமோசமாகி விட்டது. தண்ணீர் கூட விடுவதில்லை. சிறுநீர் கழிக்கும் இடத்தில் தண்ணீர் வரும் குழாயை அடைத்து வைத்திருக்கின்றனர். சிறுநீர் துர்நாற்றம் வீசுகிறது. கழிப்பறைக்குச் சென்றால், கதவுகள் உடைந்து தொங்குகின்றன. தாழ்ப்பாள் கூட இல்லை.

முகம், கை கழுவும் இடத்தில் 3 கண்ணாடிகள் இருந்தன. உடைந்த 2 கண்ணாடிகளுக்கு பதிலாக புதிதாக பொருத்தவில்லை. ஒரே ஒரு கண்ணாடி மட்டுமே இருக்கிறது. டைல்ஸ் கற்கள் பெயர்ந்து கிடக்கின்றன.

கழிப்பறை கதவுகளில் இஷ்டத்துக்கு ஒட்டியுள்ள பிட் நோட்டீஸ்களையும் பார்க்க முடிகிறது. குப்பையை சுத்தம் செய்யும் வேலை மட்டும் நேற்று நடந்தது.இத்தனைக்கும் இப்போது ஒரு நபருக்கு சிறுநீர், மலம் கழிக்க ரூ.5, குளியலுக்கு ரூ.10 வீதம் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

டெண்டர் கோரி லட்சக்கணக்கில் வருவாய் ஈட்டும் மாநகராட்சி, மக்கள் நலனில் அக்கறை செலுத்தாமல் இருக்கிறது. தொற்று நோய் பரவும் அளவுக்கு துர்நாற்றம் வீசுகிறது.

இதை கூட கண்காணிக்க முடியாத அளவுக்கு மாநகராட்சி பொறியியல் பிரிவு அதிகாரிகளுக்கு வேறென்ன வேலை இருக்கிறது என தெரியவில்லை.

Advertisement