விஜய் அமைச்சரவையில் முஸ்லிம் லீக்; ஷாஜகான் இடம்பெறுவார் என அறிவிப்பு

30

சென்னை: விஜய் அமைச்சரவையில் முஸ்லிம் லீக் சார்பில் பாபநாசம் தொகுதியில் வெற்றி பெற்ற ஷாஜஹான் இடம் பெறுவார் என அக்கட்சி தலைவர் காதர் மொய்தீன் அறிவித்தார்.

இது குறித்து முஸ்லிம் லிக் கட்சி தலைவர் காதர் மொய்தீன் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: விஜய்யின் தவெகவுக்கு நாங்கள் நிபந்தனையற்ற ஆதரவு தெரிவித்தது மூலம் ஆட்சி சிறப்பாக தொடர்கிறது; நாங்கள் ஆட்சிக்கு ஆதரவு கொடுத்த சமயத்தில் இந்தியன் முஸ்லிம் லீக் சார்பில் எந்த நிபந்தனைகளையும் வைக்கவில்லை. எந்த கோரிக்கைகளையும் புதிய அரசிடம் நாங்கள் தெரிவிக்கவில்லை.

இருந்தாலும் புதிய அரசு விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் அரசு பெருந்தன்மையுடன் இந்தியன் முஸ்லிம் லீக் கட்சியையும் சேர்த்து கொள்ள முடிவு எடுத்து இருக்கிறோம்; அந்த முடிவுக்கு ஏற்ப உங்கள் கட்சி சார்பில் வெற்றி பெற்ற இரண்டு எம்எல்ஏக்களில் ஒரு எம்எல்ஏவுக்கு அமைச்சர் பதவி கொடுக்க உங்களது ஒப்புதல் வேண்டும் என்று கேட்டார்கள். இது எங்களுக்கு ஒரு எதிர்பாராத செய்தி.

நாங்கள் கேட்கவும் இல்லை; எந்த கோரிக்கையையும் வைக்கவில்லை; இருந்தாலும் ஆட்சியில் அமர்ந்து இருக்க கூடிய விஜய் தலைமையிலான இந்த ஆட்சியில் முஸ்லிம் லீக் கட்சியினரும் அமைச்சரவையில் இடம்பெற வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில், பெருந்தன்மையுடன் எங்களை அணுகியதற்கு நாங்கள் நன்றி சொல்ல கடமைப்பட்டு இருக்கிறோம். இது பற்றி நேற்று முதல் இன்று வரை கலந்து ஆலோசித்து பேசினோம்.

அமைச்சரவையில் முஸ்லிம் லீக் சார்பில் பாபநாசம் தொகுதியில் வெற்றி பெற்ற ஷாஜஹான் இடம் பெறுவார். ஒருவரை முதலில் தேர்ந்தெடுத்து அனுப்புவோம்; அதன் பிறகு அடுத்தவரை பற்றி சிந்திப்போம், கேட்போம் என்ற அடிப்படையில் முதலில் ஒருவரை தேர்வு செய்துள்ளோம். இவ்வாறு காதர் மொய்தீன் கூறினார்.

Advertisement