பஸ் நிலையத்தில் புறக்காவல் நிலையம் பயணிகள் கோரிக்கை
திட்டக்குடி, மே 22–
திட்டக்குடி பஸ் நிலையத்தில் புறக்காவல் நிலையம் அமைக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மாவட்டத்தில் திட்டக்குடி நகராட்சியாகவும், தாலுகாவாகவும் உள்ளது. இங்குள்ள பஸ் நிலையத்தை பயன்படுத்தி வதிஷ்டபுரம், தர்மகுடிக்காடு, கோழியூர், கோடங்குடி, சிறுமுளை, பெருமுளை, கீழ்ச்செருவாய், இளமங்கலம் மற்றும் பெரம்பலுார் மாவட்ட கிராமங்கள் என, 50க்கும் மேற்பட்ட கிராம மக்கள் தங்களின் அத்தியாவசிய தேவைகளுக்கு திட்டக்குடி வந்து, இங்கிருந்து கடலுார், திருச்சி, சென்னை சேலம் உட்பட பல பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.
இரவு நேரங்களில் போதிய போலீஸ் இல்லாததால் குடிமகன்கள் மற்றும் மர்ம நபர்கள் வெளியூரில் வரும் பயணிகள் மற்றும் பெண்களிடம் தகராறு செய்து வாக்குவாதத்தில் ஈடுபடுவதால் அச்சமடைந்தனர்.
இதற்காக, கடந்த 2008 ல் புறக்காவல் நிலையம் அமைக்கப்பட்டது.
இதனால் பயணிகள் பாதுகாப்பாக இருந்தனர். கடந்த, 2 ஆண்டுகளுக்கு முன் பஸ் நிலையம் மேம்படுத்தும் பணி துவங்கியபோது, புறக்காவல் நிலையம் இடிக்கப்பட்டது.
ஆனால் இதுவரை புறக்காவல் நிலையம் கட்டாததால் இரவு நேரங்களில் பயணிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகும் நிலை உள்ளது.
எனவே, பயணிகளின் பாதுகாப்பு கருதி, திட்டக்குடி பஸ் நிலையத்தில் புறக்காவல் நிலையம் அமைக்க மாவட்ட காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.