வடபழனி முருகன் கோவில் பிரம்மோத்சவம் கொடியேற்றத்துடன் கோலாகல தொடக்கம்
சென்னை, மே 22–-
வடபழனி முருகன் கோவிலில், வைகாசி விசாக பிரம்மோத்சவ விழா கொடியேற்றத்துடன் நேற்று கோலாகலமாக தொடங்கியது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமியை தரிசித்தனர்.
சென்னை, வடபழனி முருகப்பெருமான் கோவிலில், வைகாசி விசாகத்தை முன்னிட்டு, 10 நாள் பிரம்மோத்சவ விழா நேற்று தொடங்கியது. இதை முன்னிட்டு, நேற்று முன்தினம் மாலை மூஷிக வாகன புறப்பாடு நடந்தது.
பிரம்மோத்சவத்தின் முதல் நாளான நேற்று காலை 7:35 மணி முதல் 9:00 மணிவரை துவஜா ரோஹணம் எனும் கெடியேற்ற வைபவம் நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, ‘அரோகரா’ கோஷமிட்டனர். பின், முருகப்பெருமானை தரிசித்தனர்.
அதைத் தொடர்ந்து, மங்கள கிரி விமான புறப்பாடு நடந்தது. இரவும் மங்களகிரி விமானத்தில் வள்ளி தெய்வயானை சமேத சுப்பிரமணியர் வீதி உலா நடந்தது.
விழாவின் இரண்டாம் நாளான இன்று காலை, சூரிய பிரபை புறப்பாடு, இரவு சந்திர பிரபை புறப்பாடும் நடக்கிறது. வரும், 23ம் தேதி இரவு 7:00 மணிக்கு ஆட்டுக்கிடா வாகனத்தில் வள்ளி தேய்வயானை சமேத சுப்பிரமணியர் வீதி உலா நடக்கிறது. அடுத்த நாள், நாக வாகனத்தில் சுப்பிரமணியர் அருள்பாலிக்கிறார்.
பஞ்சமூர்த்திகள் புறப்பாடு, 25ம் தேதியும், அடுத்தநாள் இரவு யானை வாகன புறப்பாடும் நடக்கிறது.
பிரம்மோத்சவத்தின் முக்கிய நாளான, 27ம் தேதி காலை தேர் திருவிழா நடக்கிறது. அன்று காலை 7:05 மணி முதல் 7:25 மணிக்குள் பக்தர்களால் தேர் வடம் பிடித்து இழுக்கப்படுகிறது. இரவு ஒய்யாளி உற்சவம் நடக்கிறது.
குதிரை வாகன புறப்பாடு, 28ம் தேதி நடக்கிறது. 29ம் தேதி இரவு 7:00 மணிக்கு வடபழனி முருகன் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
வைகாசி விசாகமான, 30ம் தேதி காலை 7:35 மணிக்கு வள்ளி தேவசேனா சமேத சண்முகர் விதி உலா நடக்கிறது. காலை 9:00 மணிக்குள் தீர்த்தவாரி உற்சவமும், கலசாபிஷேகமும் நடக்கிறது. அன்று இரவு 7:00 மணிக்கு திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது.
பின், சுப்பிரமணியர் வீதி உலாவை அடுத்து, கொடியிறக்கத்துடன் பிரம்மோத்சவ விழா நிறைவு பெறுகிறது. வரும், 31ம் தேதி இரவு விசேஷ புஷ்ப பல்லக்கு புறப்பாடு, சுப்பிரமணியர் வீதி உலா நடக்கிறது.
வைகாசி விசாக பிரம்மோத்சவ விடையாற்றி கலை நிகழ்ச்சிகள் வரும், ஜூன் 1ம் தேதி முதல், 10ம் தேதி வரை தினமும் மாலை நடக்கிறது. இதில், பரதநாட்டியம், சொற்பொழிவு, இன்னிசை கச்சேரி, வீணை கச்சேரி, இசை சொற்பொழிவு ஆகியவை நடக்கின்றன.
***
மேலும்
-
மாணவ - மாணவியருக்கான சீருடை, புத்தகம் தயார்
-
திருப்போரூர் கந்தசுவாமி கோவில் உரிமங்களுக்கு டெண்டர் வரவேற்பு
-
திருப்போரூர் பேருந்து நிலையத்தில் இருசக்கர வாகனங்களால் இடையூறு
-
செம்பாக்கம் ஏரியை துார்வாரி சீரமைக்க வேண்டுகோள்
-
பிரதான் மந்திரியின் பால் புரஸ்கார் விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம்
-
கம்பமெட்டு ரோடு இருவழிச் சாலையாக மாற்ற ஏல விவசாயிகள் கோரிக்கை