கம்பமெட்டு ரோடு இருவழிச் சாலையாக மாற்ற ஏல விவசாயிகள் கோரிக்கை

கம்பம்:கம்பமெட்டு ரோட்டை இருவழிச் சாலையாக மாற்ற நெடுஞ்சாலைத் துறை நடவடிக்கை எடுக்க ஏல விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தேனி மாவட்டத்தில் கேரளாவை தமிழகத்துடன் இணைக்க போடிமெட்டு, கம்பமெட்டு மற்றும் குமுளி ரோடுகள் உள்ளன. இதில் போடி மெட்டு மற்றும் குமுளி ரோடுகள் தேசிய நெடுஞ்சாலைத் துறை கட்டுப்பாட்டில் உள்ளன. கம்பமெட்டு ரோடு மட்டும் மாநில நெடுஞ்சாலைத் துறையிடம் உள்ளது. இரு மாநில இணைப்பு சாலைகள் தேசிய நெடுஞ்சாலைத்துறையிடம் இருக்க வேண்டும் என்பது சட்டமாகும். ஆனால் கம்பமெட்டு ரோடு மட்டும் மாநில நெடுஞ்சாலைத் துறை வசம் உள்ளது.

கம்பத்தில் இருந்து கேரளா செல்ல குமுளி ரோடு வழியாக சென்றால் 20 கி.மீ. தூரமும், கம்பமெட்டு ரோடு வழியாக சென்றால் 13 கி.மீ . தூரமும் பயணம் செய்ய வேண்டும். 7 கி.மீ. தூரம் மிச்சமாகும்.

கம்பமெட்டு ரோட்டில் 8 கி.மீ. தூர மலை ரோடு வனத்துறை வசம் உள்ளது. இந்த ரோடு பராமரிப்பு செய்ய அனுமதி பெற வேண்டி உள்ளது.

தினமும் காலை,மாலையில் தோட்ட தொழிலாளர்கள் நூற்றுக்கணக்கான ஜீப்புகளில் சென்று வருகின்றனர். விவசாயிகள், வணிகர்கள், இருமாநில பொதுமக்கள் என அதிக போக்குவரத்து இந்த ரோட்டில் நடைபெறுகிறது . சபரிமலை சீசனில் ஒரு வழிப்பாதை, மூணாறு ரோடு பழுதானால் மாற்று ரோடு என பல வகைகளில் பயன்படுகிறது.

மலை ரோடு 5.5 மீட்டர் முதல் 7 மீட்டர் வரை அகலம் உள்ளது. 20 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன.

எனவே இந்த ரோட்டை இருவழிச் சாலையாக மாற்ற நெடுஞ்சாலைத் துறை முன் வர வேண்டும். இதற்கென கருத்துரு தயாரித்து அரசிற்கு வழங்க வேண்டும் என்று ஏல விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement