திருப்போரூர் பேருந்து நிலையத்தில் இருசக்கர வாகனங்களால் இடையூறு

திருப்போரூர்:திருப்போரூர் பேருந்து நிலைய வளாகத்தில் இருசக்கர வாகனங்களை நிறுத்துவதால், அங்கு வரும் பேருந்துகள் உள்ளே சென்று வெளியேறுவதில் இடையூறு ஏற்படுகிறது.

செங்கல்பட்டு மாவட்டம், ஓ.எம்.ஆர்., சாலையை ஒட்டி திருப்போரூரில், பேருந்து நிலையம் உள்ளது.

இந்த பேருந்து நிலையத்திலிருந்து தாம்பரம், செங்கல்பட்டு, தி.நகர், பிராட்வே, கிளாம்பாக்கம் உட்பட பல்வேறு இடங்களுக்கு, அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இங்கு தினமும் நுாற்றுக்கணக்கான பயணியர் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்து செல்கின்றனர்.

பேருந்து நிலையத்தை ஒட்டி, பேரூராட்சி நிர்வாகம் சார்பில், இருசக்கர வாகன நிறுத்தம் உள்ளது.

இது, தனியாருக்கு ஏலம் விடப்பட்டு பராமரிக்கப்படுகிறது. இங்கு, தினமும் 150 முதல் 200 இருசக்கர வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன.

ஆனாலும், பல்வேறு கிராமங்களில் இருந்து திருப்போரூர் வந்து, அங்கிருந்து சென்னை செல்வோர், வணிக கடைகளுக்கு வருபவர்கள் என பலரும், தங்களது வாகனங்களை வாகன நிறுத்துமிடத்தில் நிறுத்தாமல், பேருந்து நிலையத்தில் நிறுத்துகின்றனர்.

அதேபோல், கார் போன்ற நான்கு சக்கர வாகனங்களும் அவ்வப்போது பேருந்து நிலைய வளாகத்தில் நிறுத்தப்படுகின்றன.

இதனால், பேருந்து நிலையத்திற்குள் பேருந்து வரும் போதும், வெளியேறும் போதும் இடையூறு ஏற்படுகிறது. பேரூராட்சி நிர்வாகம் சார்பில், விழிப்புணர்வு அறிவிப்பு பலகை, இரும்பு தடுப்பு அமைத்தும், இருசக்கர வாகனங்களை இடையூறாக நிறுத்திவிட்டு செல்வது தொடர்கிறது. இதனால், பயணியரும் சிரமப்படுகின்றனர்.

எனவே, பேருந்து நிலையத்தில் இடையூறாக இருசக்கர வாகனங்கள் நிறுத்தப்படுவதை தடுக்க பேரூராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement