செம்பாக்கம் ஏரியை துார்வாரி சீரமைக்க வேண்டுகோள்

செங்கல்பட்டு:செம்பாக்கம் ஏரியில் கழிவுநீர் கலப்பதை தடுத்து, துார்வாரி சீரமைக்க வேண்டும் என, குடியிப்போர் நலச்சங்கம், செங்கல்பட்டு கலெக்டரிடம் நேற்று கோரிக்கை மனு அளத்தனர்.

சிட்லப்பாக்கம் சர்வமங்களா நகர் குடியிருப்போர் சங்க செயலர் ரவி, செங்கல்பட்டு கலெக்டர் மாலதி ஹெலனிடம், அளித்த மனு:

செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் மாநகராட்சி, செம்பாக்கம் ஏரி, நீர்வளத்துறை கட்டுப்பாட்டில், 150 ஏக்கர் பரப்பளவில் உள்ளன. இந்த ஏரி ஆக்கிரமிப்புகாளல், 104 ஏக்கராக குறைந்துள்ளது. மற்றொருபுறம், கழிவுநீர் கலப்பதால், தண்ணீர் நிறம் மாறி, மாசடைந்து வருகிறது.

ஏரியினை புனரமைக்க, 2023ம் ஆண்டு, சி.எம்.டி.ஏ., சார்பில் 10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. இதையடுத்து சி,எம்.டி.ஏ., அரசு செயலர் மற்றும் தாம்பரம் மாநகராட்சி ஆணையர் ஆகியோர், ஏரியில் ஆய்வு செய்து, சுத்திகரிப்பு நிலையம் அமைத்து நடவடிக்கை எடுக்கப்படும் என, தெரிவித்தனர். தற்போது இத்திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. எனவே, தாம்பரம் மாநகராட்சியில், விடுபட்ட பகுதிகளில், பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்த வேண்டும். ஏரியில் கழிவுநீர் கலப்பதை தடுத்தும், துார் வாரி சீரமைத்து, நடைபாதை அமைக்க வேண்டும். சமூக விரோத செயல்கள் நடப்பதை தடுக்க வேண்டும்.

இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

அதன் பின் மனு மீது உரிய நடவடிக்கை எடுக்க, தாம்பரம் மாநகராட்சி ஆணையருக்கு, கலெக்டர் மாலதி ஹெலன் பரிந்துரை செய்தார்.

Advertisement