திருத்தணி அரசு கலை கல்லுாரியில் வரும் 29 வரை மாணவ – மாணவியர் சேர்க்கைக்கு விண்ணப்பம் வரவேற்பு

திருத்தணி, மே 22–

திருத்தணி அரசு கலைக் கல்லுாரியில் இளங்கலை முதலாமாண்டில் மாணவ – மாணவியர் சேர்க்கைக்கு ஆன்லைன் மூலம், வரும் 29ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என கல்லுாரி முதல்வர் ஏகாதேவசேனா அறிவுறுத்தியுள்ளார்.

திருத்தணி சுப்ரமணிய சுவாமி அரசினர் கலைக் கல்லுாரியில், நடப்பாண்டில் 2026 – 27ம் ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பில், பி.எஸ்சி., கணிதம், இயற்பியல், கணினி அறிவியல், பி.ஏ., தமிழ், ஆங்கிலம், வரலாறு, பொருளியியல், பி.காம்., கணக்குப்பதிவியல், வணிகவியல், தாவரவியல் போன்ற, 14 பாடப்பிரிவுகளில் 986 மாணவ – மாணவியர் புதியதாக சேர்க்கப்படுவர்.

இது குறித்து திருத்தணி அரசு கலைக் கல்லுாரி பொறுப்பு முதல்வர் ஏகாதேவசேனா கூறியதாவது:

அரசு கல்லுாரியில் இளங்கலை பட்டப்படிப்பில் சேர்வதற்கு ஆன்லைன் மூலம், வரும் 29ம் தேதி வரை விண்ணப்பம் செய்யலாம். மாணவ – மாணவியர் பாடப்பிரிவு தேர்வு செய்யும் போது, குறைந்தபட்சம் மூன்று பாடப்பிரிவுகள் தேர்வு செய்து விண்ணப்பிக்கவும்.

பொதுப்பிரிவு மற்றும் பிற்படுத்தப்பட்ட பிரிவு மாணவ – மாணவியர் விண்ணப்ப கட்டணம், 48 ரூபாய், பதிவு கட்டணம், 2 ரூபாய் என மொத்தம், 50 ரூபாய் செலுத்த வேண்டும்.

எஸ்.சி., எஸ்.டி., மாணவர்களுக்கு பதிவு கட்டணம், 2 ரூபாய் மட்டும் செலுத்தினால் போதும். கலந்தாய்வு நடைபெறும் நாட்கள் குறித்து கல்லுாரி www.ssgac.ac.in என்ற இணையதளத்தில் வெளியிடப்படும்.

கல்லுாரியில் சேர விரும்பும் மாணவ – மாணவியர், www.tngasa.in மற்றும் www.tngasa.org என்ற இணையவழியில் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பம் செய்வதற்கான வழிகாட்டுதலுக்கு கல்லுாரி அலுவலகத்தில் வேலை நாட்களில், காலை, 10:00 மணி முதல், மாலை, 5:00 மணி வரை மாணவர் சேர்க்கை உதவி மையத்தை அணுகலாம்

மேலும், மாணவ – மாணவியரின் சந்தேகங்களுக்கு, 94444 16007 , 97861 43786 மற்றும் 99522 82245 ஆகிய மொபைல் போன் எண்களில் தொடர்பு கொண்டு தெரிந்துக் கொள்ளலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement