சுருளி அருவியில் பூத நாராயணர் கோயில் திருப்பணிகள் இழுபறி: பாலாலயம் முடிந்தும் திருப்பணி துவங்கவில்லை

கம்பம்;சுருளி அருவியில் பிரசித்தி பெற்ற பூதநாராயணர் கோயில் பாலாலயம் செய்து 22 மாதங்கள் கடந்தும் திருப்பணி வேலைகள் இழுபறி நிலையாக உள்ளது. இதனால் கும்பாபிஷேகம் தாமதமாகி வருகிறது.

சுருளி அருவியில் பிரசித்தி பெற்ற பூதநாராயணர் கோயில் உள்ளது. இங்கு ஒரே கருவறையில் சிவனும், பெருமாளும் எழுந்தருளியுள்ளனர். பூத நாராயணராக பெருமாளும், அத்திவரதராக சிவனும் எழுந்தருளிய ஸ்தலமாகும். பண்டை காலத்தில் தேவர்களை அரக்கர்கள் அழிக்க முற்பட்ட போது, தேவர்களை சுருளிமலையில் மறைத்து வைத்து, பூதமாக நின்று காவல் காத்தார் என்பதால் பூதநாராயணராக இங்கு பெருமாள் எழுந்தருளியுள்ளார் என கூறப்படுகிறது.

மறைந்த முன்னோர்களுக்கு திதி கொடுப்பவர்கள் , அவர்கள் ஆன்மா சாந்தியடைய இக் கோயிலில் மோட்ச தீபம் ஏற்றுவது சிறப்பானதாகும்.

திருப்பணிகள் மற்றும் கும்பாபிஷேகம் 2004 ல் நடைபெற்றது. 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என்பது ஆகம விதி. ஆனால் இக் கோயிலில் 20 ஆண்டுகளை கடந்ததால், 2024 ஜூன் மாதம் திருப்பணி செய்து கும்பாபிஷேகம் செய்ய பரம்பரை அறங்காவலர்களும், ஹிந்து சமய அறநிலைய துறையும் முடிவு செய்து பாலாலயம் செய்தனர்.

ஆனால் பாலாலயம் முடிந்த பின் திருப்பணி வேலைகள் செய்ய முயற்சிகள் நடைபெறவில்லை. ஹிந்து சமய அறநிலைய துறை ஆண்டிற்கு ஒரு முறை உண்டியலை மட்டும் எடுத்து செல்கின்றனர். ஆனால் கோயிலில் திருப்பணி மேற்கொள்ள ஆர்வம் காட்டவில்லை.

பாலாலயம் முடிந்து 22 மாதங்களை கடந்துள்ளது. உபயதாரர்களை அழைத்து வேண்டுகோள் விடுத்தால் செய்து விடுவார்கள். அதற்கான முயற்சிகளை ஹிந்து சமய அறநிலைய துறை அதிகாரிகள் முன்னெடுக்க வேண்டும் என்று ஆன்மிக அன்பர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Advertisement