மெயின் ரோட்டில் மதுக்கடை எதற்கு? மக்கள் போராட்டத்தால் பரபரப்பு 

உடுமலை: குறிச்சிக்கோட்டையிலுள்ள, ‘டாஸ்மாக்’ மதுபான கடை மற்றும் மனமகிழ் மன்ற பார் ஆகியவற்றை அகற்ற வலியுறுத்தி, பா.ஜ., மற்றும் கிராம மக்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு நிலவியது.

உடுமலை – மூணாறு ரோட்டிலுள்ள குறிச்சிக்கோட்டையில், அரசு மதுபானக்கடை மற்றும் அருகில் மனமகிழ் மன்ற ‘பார்’ செயல்பட்டு வருகிறது.

சுற்றுலா முக்கியத்தும் வாய்ந்த ரோட்டில், மதுக்கடைகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டு வருகிறது; அருகிலுள்ள கிராம குடியிருப்பில், மக்கள் வசிக்க முடியாத சூழ்நிலை நிலவுகிறது.

ரோட்டோரத்தில் காலி மதுபாட்டில்களை வீசுகின்றனர். மெயின் ரோட்டில் ‘குடி’மகன்கள் நின்று கொள்வதால், வாகனங்கள் செல்வதற்கும் இடையூறு ஏற்படுகிறது என, பல முறை திருப்பூர் மாவட்ட நிர்வாகத்துக்கும் புகார் மனு அனுப்பினர்.

இந்நிலையில், நேற்று காலை ‘டாஸ்மாக்’ மதுக்கடை முன் கிராம பெண்கள் உள்ளிட்ட மக்களும், பா.ஜ., வினரும் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குறிச்சிக்கோட்டை, ஆலாம்பாளையம் பிரிவு உள்ளிட்ட பகுதிகளில் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும், மதுக்கடைகளை உடனடியாக அகற்ற வேண்டும். சுற்றுலா வாகனங்கள் அதிகளவு செல்லும் ரோட்டில் மதுக்கடையால் விபத்துகள் ஏற்படுகிறது.

பெண்களுக்கும் பாதுகாப்பில்லாத சூழல் உள்ளது. பல முறை புகார் தெரிவித்தும், மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை. உரிய நடவடிக்கை எடுக்கும் வரை தொடர் போராட்டங்களில் ஈடுபடுவோம் என, மக்கள் தெரிவித்தனர்.

ஆர்ப்பாட்டம் செய்த பிறகு, மூணாறு ரோட்டில் மறியலிலும் ஈடுபட முயன்றனர். தகவல் கிடைத்த வருவாாய்த்துறையினர் மற்றும் தளி போலீசார் சம்பவ இடத்துக்குச்சென்று, போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அதிகாரிகள் தரப்பில், ‘மதுக்கடைகளால் ஏற்படும் பிரச்னைகள் குறித்து, அரசின் கவனத்துக்கு கொண்டு சென்று விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டது. இதையடுத்து, மக்கள் போராட்டத்தை கைவிட்டு திரும்பிச்சென்றனர்.

மதுக்கடையை அகற்ற வலியுறுத்தி, பெண்கள் உட்பட கிராம மக்கள் நடத்திய போராட்டத்தால், அப்பகுதியில் பல மணி நேரம் பரபரப்பு நிலவியது.

Advertisement