உ.பி., கல்லுாரிகள், பல்கலைகளில் மாணவர்களுக்கு சீருடை கட்டாயம்: கவர்னர் ஆனந்திபென் படேல் உத்தரவு

1

லக்னோ: உத்தர பிரதேசத்தில் உள்ள அனைத்து பல்கலைகள், கல்லுாரிகளிலும் மாணவர்கள் சீருடை அணிவதை கட்டாயமாக்கி, அம்மாநில கவர்னர் ஆனந்திபென் படேல் உத்தரவிட்டுள்ளார்.

உ.பி.,யில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு குஜராத்தைச் சேர்ந்த ஆனந்திபென், கவர்னராக உள்ளார். மாநில பல்கலைகளின் வேந்தரான ஆனந்திபென் படேல் தலைமையில் நேற்று முன்தினம் லோக் பவனில் பல்கலை துணைவேந்தர்களின் கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து லோக் பவன் வெளியிட்ட அறிக்கை:

மாணவர்கள் இடையே சமத்துவத்தை உண்டாக்கும் நோக்கில் மாநிலத்தில் உள்ள அனைத்து பல்கலை, கல்லுாரிகளில் சீருடை அணிவதை கட்டாயமாக்க வேண்டும். இந்த உத்தரவு, பல்லியாவில் உள்ள ஜனநாயக சந்திரசேகர் பல்கலையுடன் இணைக்கப்பட்ட அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லுாரிகளுக்கும் பொருந்தும்.

மாணவ, மாணவியர் தன்னம்பிக்கை உடையவர்களாகவும், வேலைவாய்ப்புக்கு தகுதியுடையவர்களாகவும் மாற்றும் வகையில் தொழிற்கல்வி மற்றும் திறன் சார்ந்த படிப்புகளை அறிமுகப்படுத்த வேண்டும். கூடுதல் வருமானம் ஈட்டுவதற்காக, இயற்கை விவசாயத்தை ஊக்குவிப்பதையும் மாணவர்கள் தங்கள் சொந்த நிலங்களில் இயற்கை விவசாயம் செய்ய அவர்களை ஊக்கப்படுத்த வேண்டும்.

மாணவியர் தங்கும் விடுதிகளின் நிலையை மேம்படுத்துவதையும், அவை சமூக விரோதச் சூழல்களில் இருந்து விலகி இருப்பதையும் உறுதி செய்ய வேண்டும். தேசிய கல்வி கொள்கையை திறம்பட செயல்படுத்துவதை உறுதிசெய்வதுடன், பாடங்களை தேர்வுசெய்ய மாணவர்களுக்கு உரிய சுதந்திரம் அளிக்க வேண்டும்.

வேலைவாய்ப்பை மேம்படுத்துவதற்காக, மாணவர்கள் தங்களின் முக்கியப் பாடங்களுடன் யோகா, ஓவியம் மற்றும் பிற திறன்கள் குறித்த அறிவையும் பெற வேண்டும்.

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.



Advertisement