திருவொற்றியூரில் நள்ளிரவு 3 மணி நேரம் மின் தடை: மின் வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்ட மக்கள்
திருவொற்றியூர்: நள்ளிரவில் மூன்று மணிநேரம் மின்தடை ஏற்பட்டதால், மக்கள் மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
திருவொற்றியூரின், விம்கோ நகர், பாரத் நகர், பாரதியார் நகர் மற்றும் ஸ்ரீரங்கம் நியூடவுன் போன்ற பகுதிகளில், 5,000க்கும் அதிகமான குடியிருப்புகள் உள்ளன.
கடந்த பிப்ரவரி மாதம் முதலே, கோடை வெயில் சுட்டெரிக்க துவங்கியது; மின்சார தேவை அதிகரித்துள்ளது. இந்த நிலையில் கத்திரி வெயில் தாக்கம் தற்போது அதிகரித்துள்ள நிலையில், பகல் மற்றும் இரவு நேரங்களில், தொடர்ச்சியாக மின் தடை ஏற்பட்டு வருகிறது. இதனால், மக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.
நேற்று முன்தினம் நள்ளிரவும், திடீரென தடைப்பட்ட மின்சாரம் மூன்று மணி நேரமாகியும் சீராகவில்லை. இதனால், பெண்கள், குழந்தைகள், மருத்துவ பயனாளிகள், புழக்கம் தாளாமல், வீதிகளில் தஞ்சமடைந்தனர்.
மின்தடை குறித்து விசாரிக்க, வாரிய அலுவலகத்திற்கு போன் செய்தாலும், யாரும் முறையான தகவல் தெரிவிப்பதில்லை.
இதனால், ஆத்திரமடைந்த அப்பகுதியை சேர்ந்த, 100க்கும் மேற்பட்ட மக்கள், திருவொற்றியூர் மெட்ரோ ரயில் நிலையம் அருகே செயல்பட்டு வரும், மின்வாரிய உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
மேலும், வள்ளலார் நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த, திருவொற்றியூர் த.வெ.க., - எம்.எல்.ஏ., செந்தில்குமார் மற்றும் போலீசார் அவர்களை சமாதானம் செய்தனர். பின், மின் தடையை சரி செய்ய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினர். இதனால், சிறிது நேரம் அங்கு பரபரப்பான சூழல் நிலவியது.