4 பேரிடம் ரூ. 3 லட்சம் மோசடி
புதுச்சேரி: புதுச்சேரியில் 4 பேர் மோசடி கும்பலிடம் ரூ. 3 லட்சம் இழந்துள்ளனர்.
உப்பளத்தை சேர்ந்தவரை டெலிகிராம் மூலம் தொடர்பு கொண்ட மர்மநபர், வீட்டில் இருந்தபடி பகுதிநேர வேலையாக ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்து அதிக பணம் சம்பாதிக்கலாம் என, கூறியுள்ளார். இதைநம்பிய, அவர் மர்மநபர் தெரிவித்த ஆன்லைன் வர்த்தகத்தில் பல்வேறு தவணைகளாக ரூ. 2 லட்சத்து 44 ஆயிரம் முதலீடு செய்தார். அதன் மூலம் வந்த லாபத்தை எடுக்க முயன்றபோது முடியவில்லை. அதன்பிறகே, மோசடி கும்பலிடம் பணத்தை இழந்தது தெரியவந்தது.
சாரத்தை சேர்ந்தவரை தொடர்பு கொண்ட மர்மநபர், வங்கி அதிகாரி போல், தங்களது கிரெடிட் கார்டு கடன் வரம்பை அதிகரிக்க உள்ளதாகவும், அதற்கான லிங்க் ஒன்றை உங்களுக்கு அனுப்பியுள்ளதாக தெரிவித்துள்ளார். அதில் தங்களது விவரங்களை பதிவிட்டால், உடனடியாக கிரெடிட் கார்டு கடன் வரம்பு அதிகரிக்கும் எனவும் தெரிவித்துள்ளார். இதைநம்பிய அவர் மர்மநபர் அனுப்பிய லிங்கில், தனது கிரெடிட் கார்டின் அனைத்து விவரங்களை பதிவிட்டுள்ளார். அதன்பின், அவரது கார்ட்டில் இருந்த ரூ. 38 ஆயிரத்தை மர்மநபர்கள் எடுத்து விட்டனர்.
இதேபோல், உப்பளத்தை சேர்ந்த பெண் 23 ஆயிரம், லாஸ்பேட்டையை சேர்ந்த பெண் 2 ஆயிரம் என 4 பேர் மோசடி கும்பலிடம் ரூ. 3 லட்சத்து 7 ஆயிரம் இழந்துள்ளனர்.
இது குறித்த புகார்களின் பேரில், புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.