பார்சலில் வெடி மருந்து, போதை பொருட்கள்: டெலிவரி நிறுவனங்களுக்கு போலீஸ் பாடம்

கோவை:வீடுகள் மற்றும் நிறுவனங்களுக்கு பார்சல் டெலிவரி செய்யும் நிறுவனங்களின் மேலாளர்கள் ஒருங்கிணைப்பு கூட்டம், போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நடந்தது.

கமிஷனர் கண்ணன் பேசியதாவது: பார்சல்கள் பெறும், சேமிக்கும் இடங்களில் 'சிசிடிவி' கேமரா பொருத்தி, அதன் பதிவுகளை் 30 நாள் வரை பராமரிக்க வேண்டும். டெலிவரி செய்யும் பார்சல்களை பதிவேட்டில் குறிக்க வேண்டும்.

பார்சல் அனுப்பும் மற்றும் பெறும் நபர்களின் ஆதார், வாக்காளர் அடையாள, ரேஷன் கார்டு, கைபேசி எண் பதிவேட்டில் எழுத வேண்டும். தொடர்ந்து பார்சல் கொண்டுவரும் நபர்கள் மற்றும் பெற வரும் நபர்கள் மீது சந்தேகம் இருந்தால் எங்களுக்கு சொல்ல வேண்டும்.

சில நபர்கள் பார்சலில் தவறான முகவரி கொடுத்துவிட்டு, மொபைல் போன் எண் மூலமாக பேசி டெலிவரிக்கு முன்பே பார்சலை வந்து வாங்கி செல்கிறார்கள். அவர்களின் முகவரியை கேட்டு சரியாக இருந்தால் மட்டுமே கையில் கொடுக்க வேண்டும்.

ஸ்டாம்ப் போன்ற வடிவங்களில் உள்ள பேப்பர்களில் பின்புறம் போதை வஸ்து தடவி பார்சலாக அனுப்புகின்றனர். அதை முகர்ந்தால் போதை ஏறும். திரிபுரா, ஆந்திரா, ஒடிசா, ம.பி. மாநிலங்களில் இருந்து வரும் பார்சல்களை கவனமாக கண்காணிக்கவேண்டும். ஆயுதம், வெடி மருந்து, லாட்டரி சீட்டு போன்றவையும் பார்சலில் வருகின்றன.

கோவையில் தங்கி பணியாற்றும் அல்லது படிக்கும் வெளிநாட்டினர் பெயரில் வரும் பார்சல்களை கண்காணிக்க வேண்டும். பணியில் சேர்ககும் ஊழியர்களின் பின்னணி, முகவரி, முன்பு பணிபுரிந்த இடங்களின் விவரங்களை சரி பார்க்க வேண்டும்.

இவ்வாறு போலீஸ் கமிஷனர் பேசினார்.

Advertisement