பட்டப்பகலில் வீடு புகுந்து 13 சவரன் நகை கொள்ளை

புதுச்சேரி: உருளையன்பேட்டையில், பட்டப்பகலில் மர்ம நபர்கள் வீடு புகுந்து 13 சவரன் நகை கொள்ளையடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரி, உருளையன்பேட்டை, முருகன் கோவில் தெருவை சேர்ந்தவர் சத்தியமூர்த்தி, 52; டிராவல்ஸ் நடத்தி வருகிறார். இவரது மனைவி மஞ்சுளா; 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். நேற்று முன்தினம் காலை 8:30 மணிக்கு மஞ்சுளா தனது மகனுக்கு டிபன் வாங்குவதற்காக காராமணிக்குப்பத்தில் உள்ள ஓட்டலுக்கு சென்றுவிட்டு, 9:30 மணிக்கு வீட்டிற்கு வந்தார். பின், வீட்டின் கதவு திறந்திருந்த நிலையில் தனது குடும்பத்துடன் படுத்து துாங்கியுள்ளார்.

மதியம் 1:30 மணிக்கு துாங்கி எழுந்த மஞ்சுளா, அப்போது வீட்டிற்கு ஆன்லைன் ஆர்டர் செய்த டி.வி.,யை டெலிவரி செய்ய வந்த நபருக்கு பணம் கொடுப்பதற்காக மஞ்சுளா அலமாரியை திறக்க சென்றார். அலமாரி ஏற்கனவே திறந்து இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அதில் இருந்த 10 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலான 13 சவரன் நகை மற்றும் ரூ. 3 லட்சம் ரொக்கம் என, மொத்தம் 13 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான நகை மற்றும் பணம் மாயமாகி இருந்தது.

இதையடுத்து, வீடு முழுதும் தேடியும் நகை மற்றும் பணம் கிடைக்கவில்லை. இதுகுறித்து மஞ்சுளா உருளையன்பேட்டை போலீசில் புகார் அளித்தார்.

அதன்பேரில் இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் மற்றும் போலீசார் வழக்குப் பதிந்து, அப்பகுதி சி.சி.டி.வி., கேமரா காட்சிகளை ஆய்வு செய்து, நகை மற்றும் பணத்தை கொள்ளை அடித்து சென்ற மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

Advertisement