வடலுாரில் அகவல் பாராயண பிரார்த்தனை

வடலூர்: வடலுாரில் அகவல் பாராயண பிரார்த்தனை விண்ணப்ப நிகழ்வில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

வடலுார், புனித பூமி ஆலோசனைக் குழு சார்பில், புனித நகரமாக வேண்டி அகவல் பாராயண பிரார்த்தனை விண்ணப்ப நிகழ்வு நேற்று நடந்தது.

மாத பூச தினமான நேற்று வடலுார், சத்திய ஞான சபை முன் மண்டபத்தில் நடந்த பிரார்த்தனையில், ஏராளமான சன்மார்க்க அன்பர்கள் மற்றும், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

இது குறித்துபுனித பூமி ஆலோசனைக் குழுவினர் கூறியதாவது : வடலூரை புனித நகரமாக அறிவிக்க கோரி தொடர்ந்து, 2 மாத பூச தினத்தில் நாங்கள் அகவல் பாராயணம் செய்கிறோம்.

வள்ளலார் அவதரித்த மருதுார், தண்ணீரில் விளக்கு எரித்த கருங்குழி, சத்திய ஞான சபை, தருமச்சாலை அமைந்துள்ள வடலுார் பெருவெளி, பார்வதிபுரம் மற்றும், வடலுார் நகராட்சி எல்லைப் பகுதிகளை உள்ளடக்கிய 15 கி.மீ., சுற்றளவை அரசு புனித நகர பகுதியாக அறிவிக்க வேண்டும்.

இந்த எல்லைக்குள் இறைச்சி கடைகள் நடத்துவது, அசைவ உணவகங்கள் செயல்படுவது மற்றும், மதுபான கடைகள் நடத்துவது போன்ற ஜீவகாருண்யத்திற்கு எதிரான செயல்கள் முற்றிலும் தடை செய்யப்பட வேண்டும். வாயில்லா ஜீவராசிகளின் குரலாக ஒலிக்கும் இந்த வேண்டுதல் மனிதநேயத்தோடு, புலால் உண்பவர்களிடமும், தமிழக அரசிடமும் கோரிக்கையாக வைக்கப்படுகிறது.

வடலூரை அதிகாரப்பூர்வமாக புனித நகரமாக அறிவிக்கப்படும் வரை, லட்சக்கணக்கான சன்மார்க்க அன்பர்களை திரட்டி, இந்த மாதாந்திர அகவல் பாராயண ஆன்மீகப் போராட்டம் தொடர்ந்து நடைபெறும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement