பாட்மின்டன்: காலிறுதியில் அஷ்மிதா
கோலாலம்பூர்: மலேசிய மாஸ்டர்ஸ் பாட்மின்டன் காலிறுதிக்கு இந்தியாவின் அஷ்மிதா முன்னேறினார்.
கோலாலம்பூரில் மலேசிய 'மாஸ்டர்ஸ் சூப்பர் 500' பாட்மின்டன் தொடர் நடக்கிறது. பெண்கள் ஒற்றையர் பிரிவில் தகுதிச்சுற்றில் அசத்தி, பிரதான சுற்றுக்கு முன்னேறிய இந்தியாவின் அஷ்மிதா சலிஹா ('நம்பர்-71'), நேற்று இரண்டாவது சுற்றில் உலகத் தரவரிசையில் 55வது இடத்திலுள்ள மலேசியாவின் கோ ஜின் வெய்யை எதிர்கொண்டார்.
முதல் செட்டை அஷ்மிதா, 21-13 என எளிதாக கைப்பற்றினார். தொடர்ந்து அடுத்த செட்டையும் 21-16 என வென்றார். 27 நிமிடம் மட்டும் நடந்த போட்டி முடிவில், அஷ்மிதா 21-13, 21-16 என வென்று காலிறுதிக்குள் நுழைந்தார்.
மற்றொரு போட்டியில் இந்தியாவின் தேவிகா, இத்தொடரின் 'நம்பர்-1' வீராங்கனை, சீனாவின் சென் யு பெய்யை சந்தித்தார். இதில் தேவிகா 16-21, 13-21 என தோல்வியடைந்தார்.
மற்றொரு போட்டியில் இந்தியாவின் மாளவிகா, 21-16, 8-21, 15-21 என டென்மார்க்கின் லின் ஹோஜ்மார்க்கிடம் போராடி தோல்வியடைந்தார்.
ஆண்கள் இரட்டையர் பிரிவு இரண்டாவது சுற்றில் இந்தியாவின் ஹரிஹரன் அம்சகருணன், அர்ஜுன் ஜோடி, 14-21, 15-21 என்ற நேர் செட் கணக்கில் சீனாவின் ஹே யுவான், லின் ஜியாங் ஜோடியிடம் தோல்வியடைந்தது.
கலப்பு இரட்டையர் இரண்டாவது சுற்றில் இந்தியாவின் ராதிகா, சாத்விக் ஜோடி 12-21, 25-27 என அமெரிக்காவின் ஜெனி, பிரஸ்லே ஜோடியிடம் போராடி தோல்வியடைந்தது.