சென்னை அணி கனவு தகர்ந்தது: 'பிளே-ஆப்' வாய்ப்பை இழந்து வெளியேறியது
ஆமதாபாத்: முக்கிய லீக் போட்டியில் சொதப்பிய சென்னை அணி, 89 ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. 'பிளே-ஆப்' வாய்ப்பை இழந்து, தொடரில் இருந்து வெளியேறியது. கேப்டன் சுப்மன் கில், சாய் சுதர்சன் விளாசல் கைகொடுக்க, குஜராத் அணி சுலப வெற்றி பெற்றது.
வருடம் தோறும் கிரிக்கெட் லீக் தொடர் நடக்கிறது. ஆமதாபாத், மோடி மைதானத்தில் நடந்த போட்டியில் சென்னை, குஜராத் அணிகள் மோதின. குஜராத் ஏற்கனவே 'பிளே-ஆப்' சுற்றுக்கு முன்னேறிவிட்டது. தனது கடைசி லீக் போட்டியில் கட்டாய வெற்றியை எதிர்நோக்கி சென்னை களமிறங்கியது. 'டாஸ்' வென்ற சென்னை கேப்டன் ருதுராஜ், 'பவுலிங்' தேர்வு செய்தார்.
'சூப்பர்' ஜோடி: குஜராத் அணிக்கு கேப்டன் சுப்மன் கில், சாய் சுதர்சன் கலக்கல் துவக்கம் தந்தனர். இருவரும் சேர்ந்து, சென்னை பந்துவீச்சை சிதறடித்தனர். நுார் அகமது ஓவரில் 2 சிக்சர் விளாசிய சுப்மன், 23 பந்தில் அரைசதம் எட்டினார். 10 ஓவரில் 111/0 ரன் எடுக்கப்பட்டன. சுதர்சன் 35 பந்தில் அரைசதம்அடித்தார். ஸ்பென்சர் ஜான்சன் 'வேகத்தில்' சுப்மன் (64 ரன், 37 பந்து, 7x4, 3x6) அவுட்டானார். கம்போஜ் பந்தில் சுதர்சன் (84 ரன், 53 பந்து, 7x4, 4x6) வெளியேறினார். டிவாட்யா (0) ரன் அவுட்டானார். பட்லர், 23 பந்தில் அரைசதம் கடந்தார். வாஷிங்டன் சுந்தர், 7 ரன் எடுத்தார். குஜராத் அணி 20 ஓவரில் 229/4 ரன் குவித்தது. பட்லர் (57 ரன், 27 பந்து, 5x4, 4x6) அவுட்டாகாமல் இருந்தார்.
சிராஜ் மிரட்டல்: கடின இலக்கை துரத்திய சென்னை அணிக்கு 'டாப்-ஆர்டர்' பேட்டர்கள் ஏமாற்றினர். சிராஜ் வீசிய முதல் பந்தில், சாம்சன் (0) அவுட்டானார். தொடர்ந்து மிரட்டிய சிராஜ் ஓவரில் கேப்டன் ருதுராஜ் (16), உர்வில் படேல் (0) நடையை கட்ட, 3 ஓவரில் 31/3 ரன் எடுத்து தவித்தது. ஷார்ட் (24) நிலைக்கவில்லை. கார்த்திக் சர்மா (19) ரன் அவுட்டாக, 7 ஓவரில் 63/5 என நிலைமை மோசமானது.
சிறிது நேரம் வாணவேடிக்கை காட்டிய ஷிவம் துபே (47 ரன், 17 பந்து, 4x4, 4x6), ரஷித் கான் 'சுழலில்' சிக்கினார். பிரவிஸ் (8) ஏமாற்றினார். சென்னை அணி 13.4 ஓவரில் 140 ரன்னுக்கு ஆல் அவுட்டாகி தோல்வி அடைந்தது.
ஐந்தாவது முறை
சென்னை அணி 5வது முறையாக (2020, 2022, 2024, 2025, 2026) லீக் சுற்றோடு வெளியேறியது.
5 முறை (2010, 2011, 2018, 2021, 2023) கோப்பை வென்ற சென்னை அணி, 5 முறை (2008, 2012, 2013, 2015, 2019) பைனல் வரை சென்று 2வது இடம் பிடித்தது. ஒரு முறை அரையிறுதி (2009), ஒரு முறை (2014) 'பிளே-ஆப்' சுற்றில் ஏமாற்றியது.
சுப்மன் 6000 ரன்
சுப்மன் கில், 'டி-20' அரங்கில் அதிவேகமாக 6,000 ரன் (185 இன்னிங்ஸ்) எட்டிய வீரர்கள் பட்டியலில் 7வது இடம் பிடித்தார். முதலிடத்தில் கெய்ல் (162 இன்னிங்ஸ்) உள்ளார்.
* கிரிக்கெட் லீக் அரங்கில் 7வது முறையாக முதல் விக்கெட்டுக்கு 100+ ரன் எடுத்து சுப்மன்-சாய் சுதர்சன் (125 ரன்) சாதித்தனர். இதற்கு முன் வார்னர்-ஷிகர் தவான், டிராவிஸ் ஹெட்-அபிஷேக் சர்மா தலா 6 முறை 100+ ரன் சேர்த்து இருந்தனர்.
'ரன் மெஷின்' சுதர்சன்
சாய் சுதர்சன் இந்த சீசனில் தொடர்ந்து 5வது அரைசதம் அடித்தார். ஒரு சீசனில் அதிக முறை 50+ ரன் எடுத்தவர் பட்டியலில் முதலிடத்தை (தலா 5 முறை) சேவக் (2012), பட்லர் (2018), வார்னர் (2019) உடன் பகிர்ந்து கொண்டார்.
* கிரிக்கெட் லீக்கின் ஒரு சீசனில் ஒரு அணியின் இரு பேட்டர்கள் தலா 600+ எடுத்தவர் பட்டியலில் சுப்மன் கில், சாய் சுதர்சன் மீண்டும் இடம் பெற்றனர். இம்முறை சுப்மன் 616 (13 போட்டி), சுதர்சன் 638 (14 போட்டி) ரன் எடுத்துள்ளனர். 2025ல் சுதர்சன் 759, சுப்மன் 650 ரன் எடுத்தனர். இப்பட்டியலில் கெய்ல்- கோலி (பெங்களூரு, 2013), கோலி-டிவிலியர்ஸ் (பெங்களூரு, 2016), ருதுராஜ்-டுபிளசி (சென்னை, 2021), கோலி-டுபிளசி (பெங்களூரு, 2023) உள்ளனர்.
* கிரிக்கெட் லீக் அரங்கில் தொடர்ந்து 600+ ரன் எடுத்தவர் பட்டியலில் சுப்மன் கில் (2025,26), சாய் சுதர்சன் (2025. 26) இரண்டாவது இடத்தை(தலா இரு முறை) பகிர்ந்து கொண்டனர். முதலிடத்தில் (தலா 3 முறை) கெய்ல் (2011, 12, 13), வார்னர் (2016, 17, 19), ராகுல் (2020, 21, 22), கோலி (2023, 24, 25) உள்ளனர்.
10வது முறை
ஆண்கள் 'டி-20' அரங்கில் எந்த ஒரு விக்கெட்டுக்கும் அதிக முறை (10), 100+ ரன் எடுத்தவர் பட்டியலில் முதலித்தை கெய்ல்-கோலி (63 இன்னிங்ஸ்), பாபர் ஆசம்-ரிஸ்வான் (75 இன்னிங்ஸ்), டிவிலியர்ஸ்-கோலி (77 இன்னிங்ஸ்) உடன் சுப்மன்-சாய் சுதர்சன் (46 இன்னிங்ஸ்) பகிர்ந்து கொண்டனர்.
சாம்சன் காயம்
ஸ்பென்சர் ஜான்சன் வீசிய பந்தை, இடது புறமாக சென்று தடுத்தார் சென்னை அணி விக்கெட் கீப்பர் சஞ்சு சாம்சன். அப்போது இடது கை சுட்டுவிரலில் காயம் ஏற்பட, உர்வில் படேல் விக்கெட் கீப்பராக செயல்பட்டார்.
அடுத்து, குர்ஜப்னீத் சிங் வீசிய போட்டியின் 8வது ஓவரின் கடைசி பந்தை எதிர்கொண்டார் சுப்மன் கில். பேட்டிங் லேசாக உரசிய பந்து, உர்வில் படேலிடம் சென்றது. ஆனால் அரை மனதாக இருந்த உர்வில் உட்பட யாரும் 'கேட்ச்' கேட்டு அப்பீல் செய்யவில்லை. 'ரீப்ளேயில்' பந்து பேட்டில் உரசிச் சென்றது உறுதியானது. 51 ரன்னில் தப்பிய சுப்மன் கில், பின் 64 ரன்னில் தான் அவுட்டானார்.