வாய்ப்பை புறக்கணித்த இந்தியா: உலக கோப்பை கால்பந்தில் பங்கேற்க

இரண்டாம் உலகப் போர் காரணமாக 12 ஆண்டுகளுக்கு பின், உலக கோப்பை கால்பந்து 4வது சீசன் (1950, ஜூன் 24 - ஜூலை 16) பிரேசிலில் நடந்தது. ஆசியா சார்பில் பங்கேற்க இந்தியா தகுதி பெற்றது. ஆனால், போக்குவரத்து செலவு, பயிற்சிக்கு போதிய நேரமின்மை, உலக கோப்பையைவிட ஒலிம்பிக் தான் முக்கியம் உள்ளிட்ட காரணங்களை காட்டி போட்டியில் பங்கேற்க மறுத்தது. அப்போது இந்திய வீரர்கள் வெறுங்காலுடன் தான் விளையாடினர். 'பிபா' விதிமுறையின்படி 'ஷூ' அணிந்து தான் விளையாட வேண்டும். இதன் காரணமாகவும் உலக கோப்பையை இந்தியா புறக்கணித்ததாக கூறப்படுகிறது.

'ரவுண்ட்-ராபின்': முதன் முறையாக 'ரவுண்ட்- ராபின்' முறையில் போட்டிகள் நடந்தன. மொத்தம் 16 அணிகள், 4 பிரிவுகளாக லீக் சுற்றில் பங்கேற்றன. ஒவ்வொரு பிரிவிலும் முதல் இடம் பிடித்த பிரேசில், உருகுவே, சுவீடன், ஸ்பெயின் அணிகள் இறுதிச் சுற்றுக்குள் நுழைந்தன. இதில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதின.

உருகுவே சாம்பியன்: சுவீடன் (7-1), ஸ்பெயின் (6-1) அணிகளுக்கு எதிராக அடுத்தடுத்து வெற்றி பெற்ற பிரேசில் அணி கோப்பை கைப்பற்றும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. மறுபக்கம் உருகுவே அணி, சுவீடனுக்கு எதிராக (3-2) வெற்றியையும், ஸ்பெயினுக்கு எதிராக (2-2) 'டிரா'வும் செய்தது. கடைசி போட்டியில் பிரேசில், உருகுவேயை எதிர்கொண்டது.

இப்போட்டியை 'டிரா' செய்தாலே கோப்பை வெல்லலாம் என்ற நிலையில் களமிறங்கியது பிரேசில். ஆனால் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய உருகுவே அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று, 2வது முறையாக (1930, 1950) உலக கோப்பை கைப்பற்றியது.
இத்தொடரில் நடந்த 22 போட்டியில், 88 கோல் பதிவானது. பிரேசில் வீரர் அடெமிர், அதிகபட்சமாக 9 கோல் அடித்தார்.


'எக்ஸ்டிரா டைம்'

பீலே பிரமாதம்

உலக கோப்பை கால்பந்து தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற அணியில் இதுவரை 471 வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். இதில் பிரேசில் ஜாம்பவான் பீலே மட்டும் 3 முறை (1958, 1962, 1970) உலக கோப்பை வென்ற அணியில் இருந்தார்.

* உலக கோப்பை கால்பந்து அரங்கில் அதிக கோல் பதிவாக காரணமான வீரர்கள் பட்டியலில் பீலே முதலிடம். நான்கு சீசனில் (1958, 1962, 1966, 1970) பங்கேற்ற இவர், 12 கோல் அடித்தார். சகவீரர்கள் கோல் அடிக்க 10 முறை 'அசிஸ்ட்' செய்தார். ஒட்டுமொத்தமாக 22 கோல் பதிவாக பங்களித்தார்.

Advertisement