திருப்பரங்குன்றம் கோவிலில் நடந்தது என்ன? ஐகோர்ட் கேள்வி

12

சென்னை: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், அமைச்சர் நிர்மல்குமார் தரிசனம் செய்வதற்காக, தாமதமாக சன்னதி நடை அடைக்கப்பட்டது தொடர்பாக, அறநிலையத் துறை செயலர் அறிக்கை தாக்கல் செய்ய, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், அமைச்சர் நிர்மல்குமார், மே 15ம் தேதி தரிசனம் செய்தார். வழக்கமாக கோவில் நடை மதியம் 12:45 மணிக்கு சாத்தப்படும். ஆனால், அமைச்சருக்காக கோவில் நடை திறந்து வைக்கப்பட்டிருந்தது. அமைச்சரின் தரிசனத்துக்கு பின், கோவில் நடை அடைக்கப்பட்டது.

அதேபோல், கருவறையில் அமைச்சர் தரிசனம் செய்த வீடியோவும், சமூக வலைதளங்களில் பரவியது.

இந்நிலையில், கோவில்களில் சிறப்பு கட்டண தரிசன முறையை எதிர்த்த வழக்கு, நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், வி.லட்சுமி நாராயணன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, 'திருப்பரங்குன்றத்திற்கு அமைச்சர் நிர்மல்குமார் சென்றபோது என்ன நடந்தது என, அறநிலையத் துறை செயலர் அடுத்த வாரம் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்' என, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Advertisement