தினமலர் செய்தி எதிரொலி: வீல் சேருக்கு ரூ.2,000 கெடுபிடி வசூல்; ஏர்போர்ட் ஊழியர்கள்மீது நடவடிக்கை

சென்னை:முதியவர்கள் பயன்படுத்தும் வீல் சேருக்கு கெடுபிடியாக, 2,000 ரூபாய் வசூலித்த ஊழியர்கள்மீது, சென்னை விமான நிலைய நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

சென்னை விமான நிலையத்தில், முதியவர்கள் பயன்படுத்தும் வீல் சேருக்கு, 2,000 ரூபாய் வரை, ஊழியர்கள் கட்டாய வசூலில் ஈடுபடுவதாகவும், பல்வேறு சேவைகளுக்கு அடாவடியாக வசூல் நடத்துவதாகவும் பயணியர் குற்றம்சாட்டி வந்தனர்.

இதுதொடர்பான விரிவான செய்தி, நம் நாளிதழில் கடந்த 14ம் தேதி வெளியானது. இதன் எதிரொலியாக, சென்னை விமான நிலைய அதிகாரிகள், கெடுபிடி வசூல் நடத்தியவர்கள் மீது, நடவடிக்கை எடுக்க விமான நிலைய இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி, விமான நிலைய முனையத்தில், விமான நிறுவன பணியாளர், 'பாஸ்' வைத்துள்ள சிலர் சட்டவிரோதமாக இந்த செயலில் ஈடுபட்டு வந்துள்ளனர். அவர்கள் எச்சரிக்கப்பட்டு விமான நிறுவனத்திடமும் புகார் அளிக்கப்பட்டு, பணி நீக்கம் செய்ய உத்தரவிடப்பட்டு உள்ளது.

வரும் நாட்களில், இதுபோன்ற செயலில் யாரேனும் ஈடுபட்டால், சம்மந்தப்பட்ட நிறுவனத்தின் உரிமமும் ரத்து செய்யப்படும் என, விமான நிலைய ஆணைய அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

***

Advertisement