சி.ஐ.ஐ., - சைப்ரஸ் வர்த்தக அமைப்பு ஒப்பந்தம்
புதுடில்லி: சி.ஐ.ஐ., எனும் இந்திய தொழில் வர்த்தக கூட்டமைப்பு, சைப்ரஸ் நாட்டிலுள்ள தொழில் வர்த்தக சபையுடன் பரஸ்பர வர்த்தக மேம்பாட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
இதுகுறித்து, சி.ஐ.ஐ., தேசிய திறன் மேம்பாடு மற்றும் வாழ்வாதார மைய பிரிவின் தலைவர் தியாகராஜன் கூறியதாவது:
இந்திய தொழில் வர்த்தக கூட்டமைப்பும், சைப்ரஸ் தொழில் வர்த்தக சபையும் வர்த்தக மேம்பாட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. சைப்ரஸ் அதிபர் நிக்கோலஸ் கிறிஸ்டோடுலைட்ஸ் மற்றும் மஹாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் மற்றும் இந்தியா, சைப்ரஸ் நாட்டு அதிகாரிகள் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இந்தியா, சைப்ரஸ் நாடுகளுக்கு இடையே வர்த்தகம், முதலீடு, தொழில்நுட்பம் தொடர்பான கூட்டுறவை மேம்படுத்துவதே இதன் நோக்கம்.
இதையடுத்து, இரு நாடுகளிடையே கூட்டு வர்த்தகம், வர்த்தக துாதுக்குழு வருகை, கண்காட்சிகள் ஏற்பாடு, தொழில்நுட்பம், உற்பத்தி, சரக்கு போக்குவரத்து, பாதுகாப்பு, டிஜிட்டல் கண்டுபிடிப்புகள் மற்றும் சேவைகள் முதலிய துறைகளில் இணைந்து வளர இது வாய்ப்பாக அமையும்.
இவ்வாறு அவர் கூறினார்.