வெங்கரை டவுன் பஞ்.,ல் அதிகாரிகள் ஆய்வுசெயல் அலுவலர் பணியில் இருந்து விடுவிப்பு

ப.வேலுார்:வெங்கரை டவுன் பஞ்.,ல், 40 லட்சம் ரூபாய் ஊழல் நடந்திருப்பதாக புகார் எழுந்த நிலையில், டவுன் பஞ்., துணை இயக்குனர் ஆய்வு செய்தார். இதையடுத்து வெங்கரை டவுன் பஞ்., செயல் அலுவலர் பணியிலிருந்து விடுவிக்கப்பட்டார்.

நாமக்கல் மாவட்டம், ப.வேலுார் அருகே வெங்கரை டவுன் பஞ்சாயத்தில், அ.தி.மு.க.,வை சேர்ந்த விஜயகுமார் தலைவராகவும், செயல் அலுவலராக மணிகண்டனும் உள்ளனர். தற்போது நடந்து முடிந்த சட்டசபை தேர்தல் விதிகளால் தலைவர், கவுன்சிலர்கள் டவுன் பஞ்., அலுவலகம் செல்லவில்லை. இதை செயல்


அலுவலர் மணிகண்டன் தனக்கு சாதமாக பயன்படுத்தி, 40 லட்சம் ரூபாய் வரை டவுன் பஞ்., நிதியிலிருந்து பணம் எடுத்ததாக, டவுன் பஞ்., தலைவர் விஜயகுமார் குற்றச்சாட்டு எழுப்பினார்.
ப.வேலுார் போலீசார் நடத்திய விசாரணையில், செயல் அலுவலர் மணிகண்டன், 100 காசோலைகள் மூலம் எடுத்த ரூபாய்க்கு செலவு கணக்கு விபரம் காண்பிக்க, கால அவகாசம் கேட்டார். இதனால் தற்காலிகமாக இப்பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. தொடர்ந்து டவுன் பஞ்., தலைவர் விஜயகுமார், காசோலை மூலம் ஊழல் நடந்திருப்பதாக கலெக்டர் மற்றும் டவுன் பஞ்., அதிகாரிகளிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிவித்து, போர்க்கொடி துாக்கினார்.
இந்நிலையில், நேற்று டவுன் பஞ்., துணை இயக்குனர் சுலைமான் சேட்டு தலைமையில், வெங்கரை டவுன் பஞ்.,ல் கடந்த இரண்டு மாதத்தில் நடந்த செலவு கணக்கு விபரம் மற்றும் 100 காசோலை மூலம் பணம் எடுத்த விபரம் குறித்து அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். மேலும் செயல் அலுவலர் அலுவலக அறையில், ஏற்கனவே கையொப்பமிட்டு வைத்திருந்த காசோலை மூலம் பணம் எடுத்த மர்ம நபர் யார் என விசாரணை நடத்தினார்.
அதில் முறையான வரவு செலவு கணக்கு இல்லாததும், அதற்குரிய பில்கள் இல்லாததால் அதிகாரிகள் அதிருப்தி அடைந்ததாக ஊழியர்கள் தெரிவித்தனர். இதனால், வெங்கரை டவுன் பஞ்., செயல் அலுவலர் மணிகண்டனை பணியில் இருந்து விடுவித்து, பொத்தனுார் டவுன் பஞ்., செயல் அலுவலர் வேல்முருகனை, பொறுப்பு செயல் அலுவலராக நியமித்து, டவுன் பஞ்., துணை இயக்குனர் சுலைமான் சேட்டு உத்தரவிட்டார்.

Advertisement