ஈரான் போரை தொடரலாமா, வேண்டாமா?: டிரம்ப் - நெதன்யாகு காரசார விவாதம்

1

நியூயார்க்: மேற்காசிய நாடான ஈரான் மீதான ராணுவ நடவடிக்கையை கையாள்வதில் அமெரிக்கா -- இஸ்ரேல் இடையே லேசான முரண்பாடுகள் எட்டிப் பார்ப்பதாக சர்வதேச அரசியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

ஈரான் மீது உடனடியாக கடுமையான ராணுவ தாக்குதலை தொடுத்து, அதன் அணு ஆயுதக் கனவை தகர்க்க வேண்டும் என்பதில் நெதன்யாகு உறுதியாக உள்ளார். ஆனால் டிரம்போ, துாதரக ரீதியிலான பேச்சுக்கு இன்னும் ஒரு வாய்ப்பு கொடுத்து பார்க்கலாம் என்ற தொனியில் காய் நகர்த்தி வருகிறார்.

சமீபத்தில் கூட, வளைகுடா நாடுகளின் கோரிக்கையை ஏற்று, ஈரான் மீதான ஒரு திட்டமிடப்பட்ட ராணுவ தாக்குதலை டிரம்ப் தற்காலிகமாக ஒத்திவைத்தார்.

இந்நிலையில், இஸ்ரேலின் முன்னணி செய்தி நிறுவனமான, 'சேனல் 12' வெளியிட்டுள்ள தகவலின்படி, டிரம்பும், நெதன்யாகுவும் நேற்று முன்தினம் நள்ளிரவில் மிக நீண்ட மற்றும் காரசார உரையாடலை நிகழ்த்தியது தெரியவந்துள்ளது.

ஈரான் போரின் அடுத்தகட்ட நகர்வு குறித்து இரு தலைவர்களும் ஒரு மிக முக்கியமான, இறுதி முடிவை எடுக்கும் தருணத்தில் இருப்பதாக அந்த செய்தி தெரிவிக்கிறது. டிரம்ப் மற்றும் நெதன்யாகு ஆகிய இருவருக்கும் இடையே கடந்த மூன்று நாட்களில் நடக்கும் இரண்டாவது பேச்சு இதுவாகும்.

முன்னதாக தன் சீன பயணம் மற்றும் அந்நாட்டு அதிபர் ஷீ ஜின்பிங்குடனான சந்திப்பு குறித்து நெதன்யாகுவிடம் விரிவாக விவாதித்ததாக கூறப்பட்டது. அதை தொடர்ந்து, தற்போது மீண்டும் நள்ளிரவில் அவசர ஆலோசனை நடந்துள்ளது.

Advertisement