13 ஆயிரம் சோலார் பயனாளிகளுக்கு 'டபுள் ஜாக்பாட்' ரூ.30 ஆயிரம் கூடுதல் மானியம் வழங்க அரசு அனுமதி

புதுச்சேரி: புதுச்சேரியில் 13 ஆயிரம் சோலார் பயனாளிகளுக்கு 30 ஆயிரம் ரூபாய் வழங்க புதுச்சேரி அரசு அனுமதி அளித்துள்ளது.

மத்திய அரசின் பிரதம மந்திரி சூரிய வீடு இலவச மின்சார திட்டம் மூலம் வீட்டின் மேற்கூரையில் சூரிய மின் உற்பத்தி நிலையம் அமைப்பதற்கு 78 ஆயிரம் ரூபாய் மத்திய அரசின் மானியம் பெற்ற அனைத்து பயனாளிகளுக்கு வழங்கப்படுகிறது.

புதுச்சேரி அரசும் 1 கிலோவாட்டிற்கு 10 ஆயிரம் வீதம் 3 கிலோவாட் வரை 30 ஆயிரம் ரூபாய் கூடுதலாக மானியம் வழங்கப்படும் என, 15-வது சட்டசபையில் அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்து இருந்தார். இதற்கு இப்போது செயல்வடிவம் கொடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மின் துறை கண்காணிப்பாளர் கனியமுதன் கூறியதாவது:

சூரிய மின் நிலையம் அமைத்து மத்திய அரசின் மானியம் பெற உள்ள அனைத்து பயனாளிகளுக்கும் கூடுதல் மானியமாக முதல் 13 ஆயிரம் பயனாளிகளுக்கு 30 ஆயிரம் ரூபாய் வழங்க புதுச்சேரி அரசு அனுமதி அளித்துள்ளது. மாநில அரசின் கூடுதல் மானியம் பெறுவதற்கான விண்ணப்பத்தை தங்களின் சோலார் வென்டரிடம் அல்லது மின் துறை கேபிள் இயக்குதலும் பராமரித்தலும் செயற்பொறியாளர், மின் துறை தலைமை அலுவலகத்தில் பெற்று பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும்.

வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்கம் அல்லது ரத்து செய்யப்பட்ட காசோலை, ஆதார் அட்டை உள்ளிட்ட ஆவண நகல்களை சுய கையெழுத்திட்டு சமர்ப்பிக்க வேண்டும்.

இத்திட்டத்தின் மூலம் புதிதாக சேர்ந்து பயன் பெற விரும்புவோர் www.pmsuraghar.org.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். அரசின் இந்த தீவிர முயற்சி, மாநிலத்தில் பசுமை ஆற்றல் உற்பத்தியைப் பெருக்குவதோடு மட்டுமல்லாமல், நடுத்தரக் குடும்பங்களின் மாதாந்திர மின் கட்டணத்தை முற்றிலும் குறைக்க உதவும். தகுதியுடைய பொதுமக்கள் உடனே விண்ணப்பித்து இந்த அறிய வாய்ப்பைப் பயன்படுத்தி கொள்ளலாம்.

கூடுதல் தகவல்களுக்கு 9489080372, 9489080373 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement