வைகை ஆற்றில் அகற்றப்படாத குப்பை: கால்நடைகளுக்கு ஆபத்து பொதுப்பணித்துறை கவனம் செலுத்துமா

பரமக்குடி: பரமக்குடி வைகை ஆற்றில் சித்திரை திருவிழாவின் போது குவிந்த குப்பை அகற்றப்படாமல் உள்ளதால் அவற்றை சாப்பிடும் கால்நடைகள் பாதிக்கப்படுகின்றன. சுகாதாரக் கேடான நிலையை கருத்தில் கொண்டு குப்பையை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பரமக்குடியில் வைகை ஆற்றில் சித்திரை திருவிழா மே மாதம் முதல் வாரத்தில் கொண்டாடப்பட்டது. பெருமாள் கோயில் படித்துறையில் ராட்டினங்கள் உள்ளிட்ட பொழுது போக்கு அம்சங்கள் மற்றும் ஏராளமான உணவு கடைகள் அமைக்கப்பட்டது. மேலும் பலுான், வளையல் கடைகள் அதிகளவு இருந்தன.

படித்துறை உள்ளிட்ட பகுதிகளில் நகராட்சி துப்புரவு தொழிலாளர்கள் சுத்தம் செய்யும் பணியை மேற்கொண்டனர். விழா நிறைவடைந்து பத்து நாட்களைக் கடந்தும் வைகை ஆற்றில் எஞ்சிய உணவு கழிவுகள் மற்றும் பிளாஸ்டிக் குப்பை அகற்றப்படாமல் உள்ளன.இவற்றை கால்நடைகள் உண்டு வருவதால் அவை பாதிக்கப் படுகின்றன. மேலும் காற்றின் போக்கில் பிளாஸ்டிக் குப்பை பறந்து நீர் ஊற்றுக்கு சிக்கலை ஏற்படுத்தும் நிலை உள்ளது.

தண்ணீர் வரும் காலங்களில் அடைப்பு ஏற்பட்டு மீன்களுக்கு சிக்கல் உண்டாகும். ஒவ்வொரு நாளும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வைகை ஆற்றில் விளையாடுவது மற்றும் பொழுது போக்கும் இடமாகவும் பயன்படுத்துகின்றனர். ஆகவே சுகாதாரத்தை கருத்தில் கொண்டு பொதுப்பணித்துறை உடனடியாக குப்பையை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement