மின் வாரிய ஊழியர் எனக்கூறி வீடு புகுந்து சிறுமியிடம் அத்துமீறல்

அம்பத்துார்: மின் வாரிய ஊழியர் என கூறி, வீடு புகுந்து 9 வயது சிறுமியிடம் அத்துமீறிய நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

அம்பத்துார் தொழிற்பேட்டை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியைச் சேர்ந்த 9 வயது சிறுமி, வீட்டின் அருகே உள்ள பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வருகிறார்.

பள்ளி விடுமுறை காரணமாக சிறுமியும், அவரது 13 வயது சகோதரரும், நேற்று முன்தினம் வீட்டில் இருந்துள்ளனர். அப்போது மின் வாரியத்தில் இருந்து வருவதாக கூறி, வீட்டிற்குள் ஒருவர் நுழைந்துள்ளார்.

பின், வீட்டின் மின்சார மீட்டரை காட்டுமாறு கூறி, சிறுமியை முதல் மாடிக்கு அழைத்து சென்று, பாலியல் ரீதியாக அத்துமீறியதுடன், சிறுமி அணிந்திருந்த கொலுசை பறித்து தப்பினார்.

இது குறித்து, சிறுமியின் பெற்றோர் அம்பத்துார் தொழிற்பேட்டை காவல் நிலையத்தில் புகாரளித்தனர். அதன்படி, திருட்டு, போக்சோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ், போலீசார் வழக்கு பதிந்து, மர்ம நபரை தேடி வருகின்றனர்.

Advertisement