போலி கால் சென்டர் மூலம் பண மோசடி: வடமாநிலத்தை சேர்ந்த இருவர் கைது
பெங்களூரு: அமெரிக்க நிறுவனம் பெயரில், போலி கால் சென்டர் நடத்தி பண மோசடி செய்த, வட மாநிலத்தை சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டனர்.
பிரபல அமெரிக்க கணக்கியல் நிறுவனமான, 'குவிக் புக்ஸ்' பெயரில், பெங்களூரில் போலியாக கால் சென்டர் நிறுவனம் இயங்கி வருவதாக மாநில சைபர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதன் படி, நான்கு கால் சென்டர் மையங்களில் நேற்று சோதனை நடந்தது. இதில், போலியாக கால் சென்டர் நடத்திய டில்லியை சேர்ந்த பிரஷாந்த், 29, உத்தர பிரதேசத்தை சேர்ந்த ஆகாஷ், 27, ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடமிருந்து இரண்டு மொபைல் போன்கள், இரண்டு லேப்டாப்கள், ஒன்பது சி.பி.யு., உபகரணங்கள் உட்பட மின்சாதன பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இவர்கள் கடந்த நான்கு ஆண்டுகளாக பெங்களூரில் போலியாக கால் சென்டர் நிறுவனம் நடத்தி வந்தனர்.
இவர்கள் அமெரிக்க மக்களிடம் வரி ஆலோசனை வழங்குவதாக கூறி பண மோசடி செய்து உள்ளனர்.
இவர்களிடம் 70க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிந்தனர். இவர்கள் மோசடி வேலை செய்கிறோம் என்பதே தெரியாமல் இருந்து உள்ளனர். 40 கோடி ரூபாய் மோசடி செய்து உள்ளனர் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இது குறித்து, சைபர் கிரைம் டி.ஜி.பி., பிரணாப் மொஹந்தி கூறியதாவது:
அமெரிக்க நிறுவனத்தின் பெயரில் போலி கால் சென்டர் இயங்குவதாக தகவல் கிடைத்தது. இதன் படி, கோரமங்களா, சூடசந்திரா, பரப்பன அக்ரஹாரா பகுதியில் உள்ள நான்கு கால் சென்டர் மையங்களில் சோதனை நடந்தது.
வட மாநிலத்தவர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர். இவர்களுடன் தொடர்பில் உள்ளவர்கள் குறித்து விசாரிக்கப்படுகிறது. தலைமறைவாக உள்ளவர்கள் விரைவில் கைது செய்யப்படுவர்.
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும்
-
ஓராண்டில் ஒருநாள் மட்டுமே திறக்கப்பட்ட கழிப்பறை
-
விளையாட்டு செய்தி// மாநில கேரம் சாம்பியன்ஷிப் துவக்கம்
-
காஞ்சி அரசு இசைப்பள்ளியில் சேர மாணவ – மாணவியருக்கு அழைப்பு
-
மணல் ஏற்றி வந்த லாரி பறிமுதல் டிரைவர், கிளீனர் தப்பியோட்டம்
-
மாவட்ட விளையாட்டு மைதானம் கூடுதல் வசதிகளுடன் தரம் உயர்வு
-
125 பள்ளி வாகனங்கள் சோதனை 15 வாகனங்களுக்கு அனுமதி ரத்து