ராணுவ நடமாட்டத்தைக் கண்காணிக்க சிசிடிவி; பாகிஸ்தானுக்கு உளவு பார்த்தவர் கைது

2

பதன்கோட்: பஞ்சாப் மாநிலத்தில் ராணுவ நடமாட்டத்தைக் கண்காணிக்க சிசிடிவி கேமரா பொருத்திய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பஞ்சாப் மாநிலம் பதன்கோட்டில் உளவுப் பிரிவினர் நடத்திய சோதனையில், இந்திய ராணுவம் மற்றும் துணை ராணுவப் படைகளின் நடமாட்டம் குறித்த ரகசியத் தகவல்களை பாகிஸ்தானுக்குப் பகிர்ந்ததாக ஒரு நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இதன் மூலம் ஒரு பெரிய உளவு நெட்வொர்க் முறியடிக்கப்பட்டுள்ளது.

சக் தரிவால் கிராமத்தைச் சேர்ந்த பல்ஜித் சிங், சுஜன்பூரில் உள்ள தேசிய நெடுஞ்சாலையின் அருகே ஒரு கடையில் சிசிடிவி கேமராவைப் பொருத்தி, ராணுவ வீரர்களின் நடமாட்டத்தைக் கண்காணித்து வந்துள்ளார். இந்த நேரடி காட்சிகளை பாகிஸ்தான் மற்றும் வெளிநாடுகளில் உள்ள உளவு அமைப்புகளுக்கு அவர் அனுப்பியதாக மூத்த போலீஸ் அதிகாரி தல்ஜிந்தர் சிங் தில்லான் தெரிவித்தார்.

மேலும் அவர் கூறியதாவது ; பல்ஜித் சிங் ஜனவரி மாதம் கேமராவைப் பொருத்தியதை ஒப்புக்கொண்டார். துபாயைச் சேர்ந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவரிடமிருந்து இதற்காக அவர் ரூ.40,000 பெற்றுள்ளார். ஒரு சிசிடிவி கேமரா மற்றும் வைபை ரூட்டர் அவரிடமிருந்து கைப்பற்றப்பட்டது. மேலும் விக்ரம்ஜித் சிங், பல்விந்தர் சிங் மற்றும் தரன்பிரீத் சிங் ஆகியோர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தலைமறைவாக உள்ள மற்றவர்களைப் பிடிக்கத் தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.

கடந்த மாதமும் பஞ்சாப் போலீஸார் பாகிஸ்தானின் ஐஎஸ்.ஐ ஆதரவுடன் இயங்கிய இரண்டு உளவு குழுக்களைக் கண்டுபிடித்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement