தங்கம் வென்றார் தீபக் பாட்: பெடரேஷன் தடகளத்தில்

ராஞ்சி: பெடரேஷன் கோப்பை தடகளத்தின் 10,000 மீ., ஓட்டத்தில் தீபக் பாட் தங்கம் வென்றார்.

ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியில், பெடரேஷன் கோப்பை தேசிய சீனியர் தடகளத்தின் 29வது சீசன் நடக்கிறது. ஆண்களுக்கான 10,000 மீ., ஓட்டத்தில் இலக்கை 29 நிமிடம், 42.93 வினாடியில் கடந்த உத்தரகாண்ட் வீரர் தீபக் பாட் 24, முதலிடம் பிடித்தார். இதன்மூலம் தேசிய அளவிலான போட்டியில் தனது முதல் தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார்.

கர்நாடகாவின் ஷாய்லேஷ் குஷ்வாஹா (29 நிமிடம், 57.56 வினாடி), உ.பி.,யின் பிரஷாந்த் சவுத்ரி (30 நிமிடம், 36.91 வினாடி) முறையே வெள்ளி, வெண்கலம் கைப்பற்றினர்.

பெண்களுக்கான 10,000 மீ., ஓட்டத்தில் மகாராஷ்டிராவின் ரவினா கயக்வாட், பந்தய துாரத்தை 35 நிமிடம், 30.98 வினாடியில் கடந்து தங்கம் வென்றார். மற்றொரு மகாராஷ்டிரா வீராங்கனை ஆர்த்தி பவாரா (36 நிமிடம், 24.79 வினாடி) வெண்கலத்தை தட்டிச் சென்றார். வெள்ளி பதக்கத்தை உத்தரகாண்ட் வீராங்கனை சோனியா (36 நிமிடம், 16.22 வினாடி) கைப்பற்றினார்.

பெண்களுக்கான நீளம் தாண்டுதல் பைனலில் இந்திய கடற்படை அணியின் ஆன்சி ஜோசன் (6.75 மீ.,) தங்கம் வென்றார். அஞ்சு பாபி ஸ்போர்ட்ஸ் அணியின் ஷைலி சிங் (6.58 மீ.,), பெங்களூரு, தேசிய சிறப்பு மைய அணியின் பவானி யாதவ் பாகவ் (6.39 மீ.,) வெள்ளி, வெண்கலம் கைப்பற்றினர்.

பெண்களுக்கான வட்டு எறிதல் பைனலில் ஜே.எஸ்.டபிள்யு., அணியின் சீமா (57.29 மீ.,) தங்கத்தை தட்டிச் சென்றார். ஹரியானாவின் நிதி ராணி (55.05 மீ.,), ரிலையன்ஸ் அணியின் கிருஷ்ணா ஜெயசங்கர் (55.00 மீ.,) வெள்ளி, வெண்கலம் வென்றனர்.


ஆண்களுக்கான சங்கிலி குண்டு எறிதலில் சர்வீசஸ் அணியின் ஆஷிஸ் ஜகார் (68.52 மீ.,), ரிலையன்ஸ் அணியின் தம்னீத் சிங் (67.62 மீ.,), ஹரியானாவின் அஜய் குமார் (64.93 மீ.,) முறையே தங்கம், வெள்ளி, வெண்கலம் வென்றனர்.

Advertisement