ராமேஸ்வரம் அருகே அனுமதியின்றி ஜெபக்கூட்டம்: அதிகாரிகள் கைவிரிப்பு

51

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் அருகே பாம்பனில் தேசிய நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான இடத்தில் அனுமதியின்றி கிறிஸ்தவ ஜெபக்கூட்டம் நடந்தது.

பாம்பன் அக்காள்மடம் அருகில் தேசிய நெடுஞ்சாலைதுறைக்கு சொந்தமான காலியான இடத்தில் நேற்று கிறிஸ்தவ ஜெபக் கூட்டம் நடந்தது. பிரம்மாண்ட பந்தல் அமைத்து ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இந்த பந்தலின் உறுதித் திறன் குறித்து பொதுப்பணித் துறையின் சான்று பெற்று, போலீசார் அனுமதியுடன் ஜெபக்கூட்டம் நடந்தது.

ஆனால் தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் அனுமதி பெறாமல், ஜெபக்குழுவினர் கூட்டத்தை நடத்தினர். இதுகுறித்து ராமநாதபுரம் தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரி கூறுகையில், இது போன்ற கூட்டங்களுக்கு எங்களிடம் அனுமதி பெறுவதில்லை. போலீசார் தான் அனுமதி வழங்குவார்கள் எனக் கூறி கைவிரித்தனர்.

இதனால் இங்கு தினமும் இளைஞர்கள், மாணவர்கள் கிரிக்கெட், கைப்பந்து உள்ளிட்ட பல விளையாட்டு போட்டிகள் மற்றும் ஞாயிறு தோறும் நடக்கும் பிரம்மாண்ட காய்கறி சந்தைக்கு சிக்கல் ஏற்படும்.


இது குறித்து ஹிந்து முன்னணி மாவட்டத் தலைவர் ராமமூர்த்தி கூறியதாவது: இங்கு எதிர்காலத்தில் தேசிய நெடுஞ்சாலைத் துறையிடம் அனுமதியின்றி அடுத்தடுத்து பிற மதம் சார்ந்த கூட்டங்கள் நடக்கவும் வாய்ப்பு உள்ளதால், விளையாட்டு மைதானம் மற்றும் சந்தைப் பகுதி என்பது மாறி மத ரீதியான பிரசார மைதானமாக மாறக் கூடும்.

மேலும் இங்கு பிற மதத்தினரும் (ஹிந்து, முஸ்லிம்) கூட்டம் நடத்த முயற்சித்தால், சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. எனவே இளைஞர்கள், மாணவர்கள், மக்கள் நலன் கருதி இங்கு மத ரீதியான கூட்டத்திற்கு அனுமதிப்பதை தமிழக அரசு தடுக்க வேண்டும் என்றார்.

Advertisement