த.வெ.க., வேட்பாளர் மீது தாக்குதல்: சேகர்பாபு மீது கொலை முயற்சி வழக்கு

சென்னை: தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் சினோரா அசோக் மற்றும் வழக்கறிஞர் விஜயகுமார் மீது தாக்குதல் நடத்தியதாக, தி.மு.க., முன்னாள் அமைச்சர் சேகர்பாபு மீது, கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ், போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

சட்டசபை தேர்தலில், சென்னை துறைமுகம் தொகுதியில், தி.மு.க.,வை சேர்ந்த முன்னாள் அமைச்சர் சேகர்பாபு, 63, போட்டியிட்டார். இவரை எதிர்த்து, த.வெ.க., வேட்பாளர் சினோரா அசோக், 59, உள்ளிட்டோர் போட்டியிட்டனர்.

ஓட்டுப்பதிவு நடந்த, ஏப்., 23ம் தேதி, பாரிமுனை அருகே மண்ணடி, அங்கப்பன் நாயக்கன் தெருவில் உள்ள ஓட்டுச்சாவடிக்கு சேகர்பாபு மற்றும் அவரது தலைமையில், 30க்கும் மேற்பட்டோர் சென்றுள்ளனர்.

அப்போது, அந்தப் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் மர்ம நபர்கள் தங்கி இருப்பதாக, த.வெ.க.,வினர் குற்றம்சாட்டினர். இதனால், அவர்களுக்கும், தி.மு.க.,வினருக்கும் திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது. வேட்பாளர்களான சேகர்பாபு, சினோரா அசோக் ஆகியோரும் மோதிக்கொண்டனர்.

அப்போது சினோரா அசோக்கை, சேகர்பாபு அடித்து தாக்கி உள்ளார். இதனால், சினோரா அசோக்கிற்கு காயம் ஏற்பட்டது.

இச்சம்பவம் தொடர்பாக, வடக்கு கடற்கரை காவல் நிலையத்தில், சினோரா அசோக், த.வெ.க., ஓட்டுச்சாவடி முகவரான முரளிதரன் மற்றும் வழக்கறிஞர் விஜயகுமார் ஆகியோர் புகார் அளித்துள்ளனர்.

இதையடுத்து, சேகர்பாபு மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது, கொலை முயற்சி, கொலை மிரட்டல், காயம் ஏற்படுத்துதல், சட்டவிரோதமாக கூடுதல், ஆபாசமாக பேசுதல் உட்பட, ஆறு பிரிவின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Advertisement