தனியார் பள்ளி வாகன ஓட்டுநர்களுக்கு மாதந்தோறும் கண் பரிசோதனை அவசியம்: திருவள்ளூர் கலெக்டர் அறிவுரை

திருவள்ளூர்:திருவள்ளூரில் நடந்த தனியார் பள்ளி வாகனங்களுக்கான கூட்டாய்வில், பள்ளி வாகன ஓட்டுநர்கள் மாதந்தோறும் கண் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என, கலெக்டர் அறிவுறுத்தினார்.

தமிழகம் முழுதும், பள்ளிகளுக்கு கோடை விடுமுறை முடிந்து, வரும் ஜூன் 1ம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட உள்ளன. பள்ளிகள் திறக்கப்படுவதற்கு முன், தனியார் பள்ளி வாகனங்களை, கலெக்டர் தலைமையில் கூட்டாய்வு செய்வது வழக்கம்.

திருவள்ளூர் மாவட்டத்தில், 271 தனியார் பள்ளிகளில், 1,657 வாகனங்கள் உள்ளன. அந்த வாகனங்களை, வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் வாயிலாக ஆய்வு செய்யும் பணி (மே 23) துவங்கியது.

திருவள்ளூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில், (மே 23) 235 வாகனங்களை, கலெக்டர் பிரதாப், எஸ்.பி., விவேகானந்த சுக்லா, கோட்டாட்சியர் ரவிச்சந்திரன், வட்டார போக்குவரத்து அலுவலர் ராமகிருஷ்ணன், மாவட்ட கல்வி அலுவலர் லிங்கேஸ்வரன் உள்ளிட்ட குழுவினர் ஆய்வு செய்தனர்.

கூட்டாய்வை துவக்கி வைத்து, கலெக்டர் பிரதாப் கூறியதாவது:

பள்ளி பேருந்துகள் பாதுகாப்பாக இயக்கப்பட வேண்டும். மாணவர்கள் பயணிக்கக்கூடிய வாகனத்தை வேகமாக இயக்க கூடாது. ஓட்டுநர்கள் மாதம்தோறும் கண் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். ஒவ்வொரு மாதமும், வாகனங்களில் முகப்பு விளக்கு, பிரேக், படிக்கட்டு உள்ளிட்டவற்றை முறையாக ஆய்வு செய்வது அவசியம்.

திருவள்ளூரை அடுத்து, திருத்தணி, செங்குன்றம், பூந்தமல்லி, கும்மிடிப்பூண்டி ஆகிய வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் தொடர்ந்து ஆய்வு மேற்கொள்ளப்படும்.

இதில், அவசர கதவுகள், வேக கட்டுப்பாட்டு கருவி, 'சிசிடிவி' ஆகியவை சரியாக பொருத்தப்பட்டுள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டு, தகுதி சான்றிதழ் வழங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக, தீயணைப்பு துறை சார்பாக, தீ விபத்து ஏற்பட்டால், எப்படி தீயை அணைப்பது என்பது குறித்து செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.

Advertisement