மதுக்கடையை அகற்ற வலியுறுத்தி போராட்டம்

காரைக்குடி:காரைக்குடியில் மதுக்கடையை அகற்ற இ.கம்யூ., போராட்டம் நடத்திய நிலையில் மதுப்பிரியர்கள் சிலர் அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

காரைக்குடி சி.மெ. வீதியில் மதுக்கடை செயல்பட்டு வருகிறது. பள்ளிகள் கோயில்கள் தியேட்டர் மற்றும் குடியிருப்புகளின் மத்தியில் மதுக்கடை செயல்படுவதை கண்டித்தும் மதுக்கடையை அகற்ற வலியுறுத்தியும் இ.கம்யூ., சார்பில் தொடர்ந்து கோரிக்கை விடப்பட்டது. ஆனால் எவ்வித நடவடிக்கையும் இல்லாததால் நேற்று இ.கம்யூ., மாநகரச் செயலாளர் சிவாஜி காந்தி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

மதுக்கடை முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மதியம் 12:00 மணிக்கு மதுக்கடைக்கு வந்த மது பிரியர்கள் போராட்டம் நடத்துவதை கண்டு ஓரமாக அமர்ந்து வேடிக்கை பார்த்தனர். ஒரு மணி நேரத்திற்கு மேலாகியும் போராட்டம் நிறைவு பெறாததால் மது வாங்க கடைக்கு வந்தனர். இதனால் போராட்டக்காரர்களுக்கும் மதுப்பிரியர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. போலீசார் சமாதானம் செய்து அனுப்பினர். அங்கு வந்த அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன் பேரில் அவர்கள் கலைந்து சென்றனர்.



எஸ்.புதுார்: எஸ்.புதுார் ஒன்றியத்தில் கோயில் அருகே உள்ள மதுபானக்கடையை அகற்றக்கோரி பெண்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

புழுதிபட்டி சத்திரம் தண்டாயுதபாணி கோயிலில் இருந்து 100 மீட்டர் துாரத்தில் அரசு மதுக் கடை இயங்குகிறது. அங்குள்ள தொடக்க, மேல்நிலைப்பள்ளிகளுக்கு செல்லும் மாணவர்கள் இக்கடை வழியாகவே சென்று வருவதால் பல்வேறு பிரச்னைகள் உருவானது. இக்கடையை அகற்ற அப்பகுதி மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில் பஸ் ஸ்டாண்ட், கல்வி நிறுவனங்கள், வழிபாட்டுத்தலங்களில் இருந்து 500 மீட்டர் தூரத்தில் உள்ள மதுக்கடைகளை அகற்ற அரசு உத்தரவிட்டிருந்த நிலையில் மாநிலம் முழுதும் 717 கடைகள் கண்டறியப்பட்டு மூட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அத்துடன் சேர்த்து இக்கடையையும் மூட வலியுறுத்தி அப்பகுதி மக்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Advertisement