வீடுகளுக்கு வண்டல் மண் இலவசம் அதிகாரிகள் கண்காணிப்பு அவசியம்
சிவகங்கை:விவசாயிகள், மண்பாண்ட தொழிலாளர், வீடுகளுக்கு இலவசமாக வழங்கப்படும் வண்டல், களி மண் விதிமீறி எடுக்காமல் இருக்க மாவட்ட நிர்வாகத்தின் கண்காணிப்பு அவசியமாகிறது.
சிவகங்கை மாவட்டத்தில் பொதுப்பணி, ஊரக வளர்ச்சித்துறையின் கீழ் 978 கண்மாய்கள் உள்ளன. இவற்றில் இருந்து வீட்டு தேவை, மண்பாண்டம் செய்ய, விவசாயத்திற்கு இலவசமாக வண்டல், களிமண் எடுத்து செல்ல, ''tnesevai.tn.gov.in'' இணையதளத்தில் விண்ணப்பித்து, விதிப்படி எடுத்து செல்லலாம் என தெரிவித்துள்ளனர்.
இலவச வண்டல், களிமண் எடுக்கும் விஷயத்தில் கலெக்டர், பொதுப்பணி, ஊரக வளர்ச்சிதுறை அதிகாரிகள் கவனமாக செயல்படாவிட்டால், மணல் கடத்தல் கும்பல் தலையிட்டு, விவசாயிகளின் விபரங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்து முறைகேடாக வண்டல், களி மண் எடுத்து இயற்கை வளத்தை சுரண்டும் சூழல் ஏற்படும்.
இதை தவிர்க்க விவசாய பயன்பாட்டிற்கு 2 ஆண்டுக்கு ஒரு முறை 25 டிராக்டர், புஞ்சை நிலத்திற்கு ஏக்கருக்கு 30 டிராக்டர், மண்பாண்டம் தயாரிக்க 20 டிராக்டர், வீட்டு உபயோகத்திற்கு 10 டிராக்டர் லோடு மட்டுமே வழங்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இலவச வண்டல், களிமண் பெற ''tnesevai.tn.gov.in'' இணையதளத்தில் ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும்.
உரிய நடைச்சீட்டு பெற்று வண்டல், களி மண்ணை எடுத்து செல்ல வேண்டும். இந்த விஷயத்தில் விவசாயிகள், மண்பாண்ட தொழிலாளர்கள் பெயரில் ஆவணங்களை சமர்பித்து, முறைகேடாக வண்டல், களி மண் கடத்தி செல்லாமல் இருப்பதை உறுதி செய்ய, கலெக்டர், பொதுப்பணி, ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் விதிகளுக்கு உட்பட்டு மட்டுமே அனுமதி வழங்க வேண்டும்.