பட்டு சேலை புரோக்கர்கள் மீது நடவடிக்கை தேவை: காந்தி சாலை வியாபாரிகள் சங்கம் கலெக்டரிடம் மனு
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் நகரில் வெளியூர் வாடிக்கையாளர்களுக்கு தொல்லை தரும் பட்டு சேலை புரோக்கர்கள் மீது நடவடிக்கை எடுக்க, காந்தி சாலை அனைத்து வியாபாரிகள் முன்னேற்ற சங்கத்தினர், காஞ்சிபுரம் கலெக்டர் சினேகாவிடம் புகார் மனு நேற்று அளித்தனர்.
காஞ்சிபுரம் நகரில் உள்ள பட்டு சேலை கடைகளில், போலி பட்டு சேலைகள் பிரதானமாக விற்கபடுவதும், அதற்கு புரோக்கர்கள் பலரும் துணையாக இருப்பதாக, நெசவாளர்கள் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வந்தனர்.
ஆனால், புரோக்கர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்தது. இந்நிலையில், காஞ்சிபுரம் காந்தி சாலை அனைத்து வியாபாரிகள் முன்னேற்ற சங்கத்தினர், பட்டு சேலை புரோக்கர்கள் மீது நடவடிக்கை எடுக்க, காஞ்சிபுரம் கலெக்டர் சினேகாவிடம் நேற்று புகார் மனு ஒன்றை அளித்துள்ளனர்.
மனுவில் கூறியிருப்பதாவது:
காஞ்சிபுரத்தில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, தாலுகா அலுவலகம், ஏகாம்பரநாதர் கோவில், பேருந்து நிலையம், ரயில் நிலையங்கள் ஆகிய இடங்களில் இருசக்கர வாகனங்களில் நின்றபடி, பட்டு சேலை புரோக்கர்கள் பயணியரிடம் தொல்லை தருகின்றனர்.
வெளியூர், வெளி மாநிலங்களில் இருந்து வரும் வாகனங்களை மறித்து, திசை திருப்பி கமிஷனுக்கு ஆசைப்பட்டு போலி தனியார் பட்டு நிறுவனங்களுக்கு அழைத்து செல்கின்றனர்.
இதனால், போலி பட்டு சேலைகள் வாங்கி, வெளியூர் மக்கள் ஏமாறுகின்றனர். நெசவாளர்கள், காந்தி சாலை வியாபாரிகள் என பலரும் இவர்களால் பாதிக்கின்றனர்.
நெசவாளர்கள் குடும்பங்கள் வேலையிழக்கும் நிலை ஏற்படுகிறது. எனவே, பட்டு சேலை புரோக்கர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.